மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் விழா தொடங்கியது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் புதன்கிழமை ஆடி பிரமோற்சவ விழா தொடங்கியது. 
வீர அழகர் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்று கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை.
வீர அழகர் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்று கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் புதன்கிழமை ஆடி பிரமோற்சவ விழா தொடங்கியது. 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் மண்டபத்தில் எழுந்தருளியிருந்த  ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு அணிவிக்கப்பட்டு பின்னர் காலை 5.45  கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

சர்வ அலங்காரத்தில் தேவியர் சமேதமாய் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்.
சர்வ அலங்காரத்தில் தேவியர் சமேதமாய் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்.

அதன்பின் கொடி மரத்திற்கு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி தர்பை புல், மலர் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து உற்சவர் சுந்தரராஜப்  பெருமாளுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.  மூலவர் சுந்தர்ராஜப் பெருமாள் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். 
கொடியேற்ற பூஜைகளை கோயில் அர்ச்சகர் கோபி மாதவன் நடத்தி வைத்தார் .கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
 
இதைத் தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் ஆடி பிரமோற்சவ விழாவின்போது, தினமும் இரவு வீர அழகர் எனும் நாமத்துடன் அழைக்கப்படும் ஸ்ரீ சுந்தரராஜப்  பெருமாள் மண்டகப்படிகளில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும். விழாவின் முக்கிய வைபவங்களாக சுந்தர்ராஜ பெருமாள், சௌந்தரவல்லித் தாயார் திருக்கல்யாண வைபவம்  ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. 

அதைத்தொடர்ந்து 9 ஆம் தேதி  இரவு சுந்தரபுரம் கடைவீதியார் மண்டகப்பிடியில் பூப்பல்லக்கு வைபவமும், ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரவு மின்விளக்கு ரதத்தில் பெருமாள் பவனி வருதலும், ஆகஸ்ட் 12 ஆம் தேதி பட்டத்தரசி கிராமத்தார் மண்டபடியில் அழகருக்கு தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உத்சவ சாந்தி நிகழ்வுடன் இந்த ஆண்டு  வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது. 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com