ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது விவாதப்பொருளே அல்ல: ப. சிதம்பரம்

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது பற்றியெல்லாம் ஒரு விவாதப்பொருளே அல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது விவாதப்பொருளே அல்ல: ப. சிதம்பரம்

காரைக்குடி: நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது ஒரு விவாதப்பொருளே அல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது எம்.பி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 

செட்டிநாடு வேளாண்மை கல்லூரியில் இந்த ஆண்டு 47 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 60 மாணவர்கள் வரை உயரும் என்று நம்புகிறேன். வேளாண்மை கல்லூரிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அதில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூலம் அறிந்தேன். இந்த ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்குரிய இடம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. 

அதேபோன்று காரைக்குடி சட்டக் கல்லூரிக்கான கட்டடம் அமைவதற்கு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது குறித்து சட்டத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்திருக்கிறேன். விரைவில் அதற்கும் கட்டடம் கட்டும் பணி தொடங்கும். அதற்கும் வகுப்புகள் நடத்துவதற்கும் தொடர்பில்லை. வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட நூலகங்களுக்காக எனது எம்.பி நிதியிலிருந்து ரூ.55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அரியக்குடி உள்ள பள்ளியில் மேம்படுத்தப்பட்ட நூலகம் அமைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் சிவகங்கை மற்றும் மானாமதுரை பகுதிகளில் அரசு பள்ளிகள் சீரமைப்பு, சிவகங்கையில் அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் என ரூ.1.13 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் பள்ளிகளில் நவீன வகுப்புகள் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடங்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்த யோசனையை ஏற்று அதற்குரிய பட்டியல் தயாரிக்கப்பட்டு விரைவில் அதற்கான நடவடிக்களை தொடங்கும். 

ஒரே நாடு ஒரே ரேசன் என்று சொல்வதெல்லாம் தவறான எண்ணம். காங்கிரஸ் கட்சி இதனை பல முறை எச்சரித்து வருகிறது. ஒரு நாட்டுக்குள்ளே பல மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையீடு கூடாது. 75 ஆண்டுகள் சுதந்திரம் நிலைத்திருப்பதை வரவேற்கிறேன், மகிழ்கிறேன், பாராட்டுகிறேன். இதற்கு அடித்தளமிட்டவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பதை மறந்துவிடக்கூடாது. 

இன்றைக்கு நாட்டில் வேலையில்லாமை மிக கொடுமையான நிலையில் இருக்கிறது. மொத்த வேலையில்லாமை என்பது 7 முதல் 8 சதவீதமாகும். 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என இளைஞர்களுக்கு வேலையில்லாமை 25 சதவீதமாகும். அதற்காக எஞ்சிய 75 சதவீதம் பேர் வேலையில் இருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். பல பேர் வேலைக்கே போவது கிடையாது. வேலை தேடுவது கிடையாது. வேலை கிடைக்காது என வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆகவே வேலைவாய்ப்பை குறைந்த புள்ளிவிபரங்களாக காட்டுகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது ஒரு விவாதப்பொருளே அல்ல. அவர் நாட்டின் குடிமகன் ஆளுநரை சந்தித்திருக்கிறார். அவர்கள் அரசியல் பேசியதாகத்தானே தெரிவித்திருக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. 

நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது. நிதி பற்றாக்குறை, நடப்புக்கணக்கு பற்றாக்குறை, கடன் சுமை, பண வீக்கம் இந்த நான்கும் மத்திய அரசு அதிகார வரம்புக்குள் அடங்கிய பொருள்கள். இதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன. இதனை நிர்வகிப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்திருக்கிறது. அதன் விளைவுதான் விலைவாசி ஏற்றம், மோசமான வளர்ச்சி விகிதங்கள். 

காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிலே நிர்வாகக் குழு கூடி ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். போதைப் பொருள்கள் ஒழிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. மதுபானத்தை தடை செய்யவேண்டும் என்பது பல ஆண்டுகளாக இருந்துவரும் சர்ச்சை. போதைப் பொருளுக்கும் மதுவுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. 

மத்திய அரசு கருப்புப்பணம் இனி இருக்காது என்று கூறி பண மதிப்பிழப்பு செய்தனர். ஆனால் நாள்தோறும் கோடிக்கணக்கில் வருமான வரித்துறை பிடிப்பதெல்லாம் என வெள்ளையாக்கப்பட்ட பணமா? என்றார் ப. சிதம்பரம். 

இப்பேட்டியின் போது காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாங்குடி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com