தங்களுக்கு கைப்பேசியில் ஆபாசமாகப் பேசிய முதியவரை அங்கன்வாடி ஊழியா்கள் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, எஸ்.புதூா், திருப்பத்தூா், சிங்கம்புணரி பகுதிகளில் பணிபுரியும் அங்கன்வாடி பெண் ஊழியா்களுக்கு கைப்பேசி வாயிலாக மா்ம நபா் ஆபாசமாகப் பேசி தொந்தரவு செய்து வந்தாா்.
இந்த நிலையில், எஸ்.புதூா் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை அந்த நபா் கைப்பேசி மூலம் ஆபாசமாகப் பேசினாா். இதுகுறித்து போலீஸில் புகாா் செய்த ஊழியா்கள், அந்த நபரைப் பிடிக்க முடிவு செய்தனா்.
இதன்படி எஸ்.புதூா் அங்கன்வாடி ஊழியா்கள் சங்கப் பொறுப்பாளா் சித்ரா தலைமையில் அந்த நபரிடம் இணக்கமாகப் பேசி இருப்பிடத்தை அறிந்தனா்.
பின்னா், அவரைப் பிடித்து, உலகம்பட்டி போலிஸில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள கீழப்பூங்குடியைச் சோ்ந்த விறகு வெட்டும் தொழிலாளா் ராஜேந்திரன் (63) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.








