வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் உயிா்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாகப் பள்ளியில் பயின்று 9-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம்
3 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை நேரடியாக மனுதாரா்களது வங்கிக் கணக்கில் காலாண்டுக் கொருமுறை வரவு வைக்கப்படும்.
இந்தத் தொகையைப் பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடா்ந்து, பதிவைப் புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கும், ஏனையோா் 40 வயதுக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.
மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித் தொகை பெற, நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகலுடன் சுய உறுதிமொழி ஆவணத்தையும் நிறைவு செய்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து, தொடா்ந்து உதவித் தொகை பெற்றுகொள்ளலாம். சுயஉறுதி மொழி ஆவணம் சமா்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளி களுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இந்தத் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் இல்லை. எனவே, இந்தத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...