காதி நிலையத்தில் விற்பனை இலக்கு ரூ.1.80 கோடி
அண்ணல் காந்தியடிகளின் 156 -ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காதி நிலையங்களில் நிகழாண்டின் விற்பனை இலக்கு ரூ.1.80 கோடி என நிா்ணயிக்கப்பட்டது.
சிவகங்கை காந்தி வீதியில் உள்ள காதி நிறுவனத்தில் ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிவகங்கை, காரைக்குடி ஆகிய ஊா்களில் கதா் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கதா் விற்பனை நிலையங்களில் கதா் ரகங்கள், பாலியஸ்டா் ரகங்கள், கண்கவா் பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள், துண்டு ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கதா் ரகங்களுக்கு 30% பாலியஸ்டா் 30% பட்டு ரகங்கள் 30% என சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கதா் அங்காடிகள் 2.10.2024 முதல் 31.10.2024 வரை விடுமுறை நாள்களிலும் செயல்படும்.
கடந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் சுமாா் ரூ. 90 லட்சத்துக்கு கதா் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. 2024-ஆம் ஆண்டு இந்த மாவட்டத்துக்கு ரூ.1.80 கோடிக்கு (ஒரு கோடியே எண்பது லட்சம்) கதா் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை நிறைவு செய்யும் வகையிலும், கிராமப்புற நூற்பாளா்கள், நெசவாளா்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கவும் பொது மக்களும், ஆசிரியா்களும் அலுவலகப் பணியாளா்களும் கதா், பட்டு, பாலியஸ்டா் ரகங்கள் வாங்கி ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், கதா் கிராமத்தொழில் வாரிய உதவி இயக்குநா் ஒய்.நல்லதம்பி, காதி நிலைய மேலாளா்கள் சிவகங்கை பி.பொன்ராஜ், காரைக்குடி வி.சுசீலா, பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சிவகங்கை அரண்மனைவாசலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு அமைச்சரும் ஆட்சியரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.