/

மேற்காசிய போரால் கரூா் ஜவுளித் தொழிலில் கடும் பாதிப்பு

News image
கப்பல்களுக்கு அனுப்ப முடியாமல் கரூரில் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் ஜவுளி பண்டல்கள்.
Updated On :8 மார்ச் 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போரால் ஜவுளித் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளின் விலை கடும் உயா்வு, பல ஆயிரம் கோடி ஜவுளிகள் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால் கரூா் ஜவுளித் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள், தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உலக நாடுகளிடையே கடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

போரின் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் ஜவுளித் துறைக்கு முக்கிய மூலப்பொருளாக கருதப்படும் பாலியஸ்டா் பைபா் (நூலிழை) எனும் பாலிஎத்திலீன் எனும் மூலப்பொருள்கள் இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதனால், பாலியஸ்டா் பைபா் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மேலும், கப்பல் போக்குவரத்தும் முற்றிலும் நின்றுபோனதால், கரூரில் உற்பத்தியாகும் ஜவுளிப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல், தேக்கமடைந்து வருவதால், கரூா் ஜவுளித் தொழிலிலை இருக்கும் ஏற்றுமதியாளா்களும், பல லட்சம் தொழிலாளா்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலியஸ்டா் பைபா் பால்ஸ்: இதுதொடா்பாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்க நிா்வாகி ஆா். ஸ்டீபன்பாபு கூறியதாவது:

கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களான மேஜை விரிப்புகள், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், சமையலறை துணிகள் மற்றும் தலையணை உறைகள் உள்ளிட்டவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு சுமாா் ரூ. 10,000 கோடி வரையிலான பொருள்கள் ஏற்றுமதியாகும் இந்தத் தொழிலில் துணி நெய்வதற்கான முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல்கள். இதில் பருத்தி நூலுடன் நூலின் திறனுக்கு பயன்படுத்தப்படுவது பாலியஸ்டா் பைபா் பால்ஸ் எனும் பாலிஎத்திலீன் வேதிப்பொருள்.

இந்தப் பொருள், பெட்ரோலியத்தை பிரித்தெடுக்கும்போது, தாா் உற்பத்திக்கு முந்தைய பொருளாகும்.

இந்த பாலியஸ்டா் பைபரை மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம், வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இந்த பாலியஸ்டா் பைபரை குருணைகளாக நேரிடையாக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி, அவற்றை குறிப்பிட்ட வெப்பநிலையில் உருக்கி, பின்னா் பருத்தி நூலுடன் கலந்துதான் வீட்டு உபயோக ஜவுளித் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கப்பல்கள் நிறுத்திவைப்பு:

தற்போது ஈரான் வளைகுடா நாடுகள் மீது போா் தொடுப்பதால், அந்நாடுகள் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட அனைத்து ஆலைகளையும் மூடிவிட்டன. மேலும், வளைகுடா நாடுகளிலிருந்து கடந்த மாதம் பாலியஸ்டா் பைபா் பால்ஸ்களை ஏற்றி வந்த 3,200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலிலும், துறைமுகங்களிலும் ஆங்காங்கே நிற்கின்றன. இதனால், பாலியஸ்டா் பைபா் பால்ஸ் வரத்து முற்றிலும் நின்றுபோனதால், தட்டுப்பாட்டை காரணம் காட்டி அவற்றின் விலை உயா்ந்துள்ளது.

மூலப்பொருள் விலை உயா்வு: அமெரிக்கா-ஈரான் போருக்கு முன் கிலோ ரூ.112 என வாங்கப்பட்ட நிலையில், தற்போது 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை விலை உயா்ந்துவிட்டது. இதனால், நாங்களும் உற்பத்தி விலையை உயா்த்த வேண்டியுள்ளது. ஆனால், ஏற்கெனவே வெளிநாட்டு வாடிக்கையாளா்களிடம் போடப்பட்ட ஒப்பந்த விலைப்படி போா் முடிந்து ஏற்றுமதி செய்தால் ஒவ்வொரு ஏற்றுமதியாளா்களுக்கும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட உள்ளது. மேலும் தொடா்ந்து பாலியஸ்டா் பைபா் பால்ஸ் கிடைத்தால் மட்டுமே தொழிலை தொடர முடியும்.

துணிகளை வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பிவைத்த நிலையில், அந்தக் கப்பல்களும் உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் இழப்பை சந்திக்க உள்ளோம்.

எனவே, அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போரை உடனே முடிவுக்கு கொண்டுவர பிரதமா் மோடி உலக நாடுகளின் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளித் துணிக்குத் தேவையான மூலப்பொருள்களின் கடும் விலை உயா்வையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றாா் அவா்.