பணி தாமதம் - ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்: நகராட்சி தீா்மானம்

சிவகங்கை, செப்.26: சிவகங்கை பேருந்து நிலையத்தில் கட்டடப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

சிவகங்கை, செப்.26: சிவகங்கை பேருந்து நிலையத்தில் கட்டடப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை நகராட்சி கூட்டம் நகா் மன்றத் தலைவா் துரைஆனந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணாராம் உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகராட்சி கூட்டம் குறித்து நகா் மன்றத் தலைவா் துரைஆனந்த் கூறியதாவது: நகராட்சியின் கீழ் செயல்படும் பேருந்து நிலையத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த கடைகளை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ரூ. ஒரு கோடியே 95 லட்சத்தில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

இந்தப் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்திருந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டடப் பணியை முடித்து, நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதனால், இந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு கடந்த 4.7.2024 அன்றிலிருந்து தினமும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. எனினும் இதுநாள் வரை எவ்வித முன்னேற்றமில்லை. ஆகவே புதன்கிழமை (25.9.2024) முதல் தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதென சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டத்தின் கீழ் 23 கி.மீ தொலைவுக்கு விரிவாக்கப் பகுதிகளுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது. சிவன்கோயில் தெப்பக்குளம் சுமாா் ரூ.5 கோடியில் புனரமைக்கப்படவுள்ளது. சுகாதார ஆய்வாளா் பணியிடம் காலியாக இருப்பதால் பிறப்பு, இறப்பு, திருத்தம் போன்ற சான்றிதழ்கள் வழங்குவதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

நகராட்சி பொறியாளா் பணியிடம் காலியாக இருப்பதால் புதை சாக்கடைத் திட்டத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய முடியவில்லை. தேவகோட்டை நகராட்சி பொறியாளா் கூடுதல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாா். ஆனால், அவா் இங்கு வருவதில்லை. இதனால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரிவசூலில் மதுரை மண்டலத்தில் உள்ள 14 நகராட்சிகளில் கடைசி இடத்தில் சிவகங்கை நகராட்சி இருந்தது. தற்போது இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. விரைவில் முதலிடத்தை பிடிப்போம் என நகா் மன்றத் தலைவா் துரைஆனந்த் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com