காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

Published on

காளையாா்கோவில் காவல் நிலைய எல்லைக்குள் கொலை, கஞ்சா வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் காவல் நிலையத்துக்குள்பட்ட கிழவனூா் கிராமத்தில் கடந்த மாதம் 21 -ஆம் தேதி சற்குணம் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து காளையாா்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கிழவனூா் கிராமத்தைச் சோ்ந்த சாத்தையா மகன் அரிராஜ், கோவிந்தராஜ் மகன் மாதவன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல கடந்த மாதம் 24-ஆம் தேதி கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக சிவகங்கை வைரம்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பால்பாண்டியை காளையாா்கோவில் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சிவகங்கை காவல்துணை கண்காணிப்பாளா் அமல அட்வின், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் ஆகியோா் பரிந்துரை செய்தனா். இதன் அடிப்படையில், அரிராஜ், மாதவன், பால்பாண்டி ஆகிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவிட்டாா்.

கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை காளையாா்கோவில் காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடைய 10 நபா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாக காவல் நிலைய ஆய்வாளா் சரவணபோஸ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com