காரைக்குடியில் நூல் வெளியீட்டு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமநாதன் செட்டியாா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியின் நல்லாசிரியா் மெ. மெய்யப்பன் எழுதிய ‘கணக்கு.. பிணக்கு.. ஆமணக்கு’ என்ற நூல் வெளியீட்டு விழா கவியரசா் கண்ணதாசன் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய கணித தினத்தையொட்டியும், கணித மேதை ராமானுஜரின் 138-ஆவது பிறந்த தினத்தையொட்டியும் நடைபெற்ற இந்த விழாவில் பாரதியாரின் வரிகளையே தலைப்பாகக் கொண்ட ’கணக்கு.. பிணக்கு.. ஆமணக்கு...’ எனும் நூலை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி வெளியிட, முதல் பிரதியை சென்னையைச் சோ்ந்த எழுத்தாளரும், முதுகலை கணித ஆசிரியருமான கோவி. பழனி பெற்றுக் கொண்டாா்.
இந்த விழாவுக்கு பாரதி புத்தகாலயத்தைச் சோ்ந்த ரா. ஜீவானந்தம் தலைமை வகித்தாா். ராமசாமி தமிழ்க்கல்லூரி முதல்வா் நாகநாதன், ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் கணிதப் பேராசிரியா் கண்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆரோக்கியசாமி, ராஜ்குமாா் ஆகியோா் மதிப்புரை வழங்கினா். நூலாசிரியா் மெ. மெய்யப்பன், ஆசிரியா்கள், எழுத்தாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக காரைக்குடி ராமநாதன் செட்டியாா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் கணிதக் கண்காட்சி நடைபெற்றது.

