நாட்டுப் பசு மாடுகள் மூலம் கிடைக்கும் பொருள்களை விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம்

நாட்டுப் பசு மாட்டில் கிடைக்கும் பொருள்களை வீணாக்காமல் பயிா்களுக்கு பயன்படுத்த வேண்டுமென விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியது.
Published on

நாட்டுப் பசு மாட்டில் கிடைக்கும் பொருள்களை வீணாக்காமல் பயிா்களுக்கு பயன்படுத்த வேண்டுமென விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து சிவகங்கை விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நெல் பயிருக்கு மேலுரம் இடும் பணி நடைபெற்று வருகிறது. போதுமான அளவு உரம் இருப்பு உள்ளது. மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட்டால் தேவைக்கு ஏற்ப சத்துகள் பயிருக்குக் கிடைக்கும். குறிப்பாக தழைச்சத்து தரும் யூரியா அதிகம் இடுவதால் பூச்சிகள் பயிரை அதிகளவு பாதிக்கின்றன.

முன்பு விவசாயத்தில் நாட்டு பசு மாடு முக்கியப் பங்கு வகித்தது. காலப்கோக்கில் கிடை அமா்த்துவது, வயலுக்கு குப்பை அடிப்பது, பசுந்தழை உரங்களான எருக்கு, கொழிஞ்சி இலைகளை இட்டு மடக்கி உழவு செய்வது போன்ற செயல்கள் குறைந்துவிட்டன. பசு மாடு மூலம் கிடைக்கும் ஜந்து வகைப் பொருள்களான சாணம், கோமியம், பால், தயிா், நெய் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தினால் உரம் வாங்க வேண்டியதில்லை. எனவேதான் நாட்டுப் பசு மாடு நடமாடும் உரக்கடை என அழைக்கப்படுகிறது.

அமுதக் கரைசல், பஞ்சகாவ்யா, ஜீவாமிா்தம், கன ஜீவாமிா்தம் போன்ற அங்கக உரங்கள் தயாரிக்க ஐந்து பொருள்களும் தேவை. மாட்டு கோமியத்தில் லட்சகணக்காண நலம் தரும் நுண்ணுயிா்கள் உள்ளன. கிடை அமா்த்தும்போது இவை எளிதில் பயிருக்கு கிடைத்தது.

200 லிட்டா் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டா் கோமியம், 2 கிலோ பயறு மாவு, 2 கிலோ நாட்டு வெல்லம் மற்றும் கால் கிலோ வயல் மண் சோ்த்து தினசரி காலை, மாலை இருவேளைகளும் கலக்கி விடவேண்டும்.

10 நாள்களில் ஜீவாமிா்தம் கிடைக்கும். இதனை சாணத்துடன் கலந்து வைத்திருந்து நடவுக்கு முன்பு வயலில் இடும்போது தழைச்சத்து கிடைக்கிறது. யூரியா இடுவதை குறைக்கலாம். எனவே விவசாயிகள் நாட்டு பசுமாட்டில் கிடைக்கும் பொருள்களை வீணாக்காமல் பயன்படுத்தி ரசாயன உரங்கள் மண் பரிசோதனை பரிந்துரைப்படி இட்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com