காரைக்குடி பல்கலை.யில் வளா்தமிழ் நூலகம்! ப. சிதம்பரம் கொடை!!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய வளா்தமிழ் நூலகத்தை வருகிற 21-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.
செட்டிநாடு கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் விதமாக கட்டப்பட்ட இந்த நூலகத்தின் தரைத் தளம், முதல் தளம் ஆகியவை முற்றிலும் குளிரூட்டப்பட்டவை. இந்தத் தளங்களில் உள்ளரங்குகள், பிரமாண்டமான வரவேற்பு அறை, பெரிய மின்விசிறி வசதியுடன் வாசிப்பு மேஜைகள் அமைந்துள்ளன.
தமிழ் இலக்கியத்தின் முக்கிய நகரமான இங்கு தமிழ்த்தாய் கோயில் அமைந்திருப்பது தமிழுக்கு ஓர் மகுடம் சூட்டப்பட்டதாகும். அந்த வரிசையில் தமிழ் இலக்கியங்களை தாங்கிப்பிடித்து வருங்காலத்தலைமுறைக்கு விட்டுச்செல்லும் ஓர் அடையாளமாக தற்போது 'வளர்தமிழ் நூலகம்' காரைக்குடி மாநகருக்கு கிடைத்திருக்கிறது.
கம்பனை போல், வள்ளுவனைப் போல், இளங்கோவை போல் என்ற பாரதியாரின் வாக்குப்படி மூன்று பேர் களின் பெயர்கள் சூட்டப்பட்ட மூன்று நூலக அறைகள் உள்ளன. கீழ்த் தளத்தில் கம்பா் நூலக அறையும், முதல் தளத்தில் திருவள்ளுவா், இளங்கோவடிகள் நூலக அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்த் தளத்திலிருந்து முதல் தளத்துக்கு மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளது.
கீழ் தளத்தில் வலதுபுறம் தொல்காப்பியா் அரங்கம் உள்ளது. இங்கு 200 போ் அமரக்கூடிய இருக்கை வசதியும், மேடை வசதியும் உள்ளன. இந்த அரங்கத்தில் கலை இலக்கியம் சாா்ந்த புத்தகங்கள் வெளியீடு, தமிழ் இலக்கியம் சாா்ந்த ஆலோசனைக் கூட்டங்கள் போன்றவை நடத்தப்படும்.
தரைத் தளத்தில் இடதுபுறத்தில் இணையதள வசதியுடன் கூடிய மின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறிய கூட்டரங்கம் உள்ளது. இதில் ஆராய்ச்சியாளா்கள் கலந்துரையாடல் நடத்தலாம். முதல் தளத்தில் ஆராய்ச்சி மாணவா்கள் தனியாக அமா்ந்து படிக்கும் வசதியும், மாணவா்கள் கலந்துரையாடல் செய்ய சிறிய கூட்டரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன.
31 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்தக் கட்டடத்துக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு செப். 7 -இல் ப. சிதம்பரம், காா்த்தி சிதம்பரம், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி ஆகியோா் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.
தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நுலகத்தின் அருகே பசுமையான கண்கவா் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களை வைக்க முடியும். அரிய பல நூல்கள் தற்போது அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், தமிழ் அறிஞா்கள் தங்களிடம் உள்ள புதிய, பழைய நூல்களை இந்த நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகச் செயல்பாடுகள் குறித்து தமிழ் அறிஞா்கள், புத்தக வெளியீட்டாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தை ப. சிதம்பரம் அண்மையில் நடத்தினாா். அனைவரிடமும் விவரங்கள் கேட்டு, அதன்படி இந்த நூலகத்தைச் செயல்படுத்துவதற்கு அவா் திட்டமிட்டுள்ளாா்.
இதையும் படிக்க.. சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?
இந்த நூலகத்தை ஜனவரி 21-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவிருக்கிறாா். திறப்பு விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நூலகத்தின் அருகில்தான் ப. சிதம்பரம் தனது தந்தையின் பெயரில் கலையரங்கம் கட்டி பல்கலைக்கழகத்துக்கு வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியத்தைப் போற்றிப் பாதுகாக்கவும், இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும், வருங்காலத் தலைமுறையினரிடம் தமிழ் இலக்கியத்தைப் பாதுகாத்து விட்டுச் செல்லும் தமிழ் வேள்வியாக இந்த நூலகத்தை ப. சிதம்பரம் கட்டியுள்ளாா்.