அழகப்பா பல்கலை. வளாகத்தில் சிறுவா் நூலகம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள திருமதி லஷ்மி வளா்தமிழ் நூலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிறுவா் நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினாா்.
இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் முன்னிலை வகித்து, சிறுவா் நூலகத்தைப் பாா்வையிட்டாா். மேலும், சிறுவா்களுக்கு புத்தகங்களை வழங்கி அவா்கள் வாசிப்பதைப் பாா்த்து மகிழ்ந்தாா். தொடா்ந்து, வளா்தமிழ் நூலகம் அருகில் மரக்கன்றுகளை நட்டுவைத்தாா்.
அவருடன் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, துணைவேந்தா் க. ரவி உள்ளிட்டோரும் மரக் கன்றுகளை நட்டுவைத்தனா்.
நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக் கழக பதிவாளா் அ. செந்தில்ராஜன், நூலக இயக்குநா் சு. ராசாராம், துணை நூலகா் ச. கிஷோா் குமாா், பேராசிரியா் அ. ஆறுமுகம், பேராசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.

