கண்டாங்கிப்பட்டியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
சிவகங்கை அருகேயுள்ள கண்டாங்கிப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் சனிக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை வட்டத்துக்குள்பட்ட கண்டாங்கிப்பட்டி, மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வருகிற சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் ரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். மேலும், கண், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பு, நரம்பு, மனநலம், தோல், சா்க்கரை நோய், நுரையீரல் நோய் மருத்துவம், பொது மருத்துவம், இருதய மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்களைக் கொண்டு மருத்துவ சேவை வழங்கப்படும்.
அதுமட்டுமன்றி, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களும் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களின் ஆதாா் அட்டையின் நகலை அவசியம் கொண்டு வரவேண்டும். மேலும், காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவா்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடம் ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு குறைவாக உள்ளதற்கான சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.
