சிறுபான்மையினா் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு முன்னுரிமை! சிறப்புக் குழுவினா் தகவல்

Published on

சிறுபான்மையினரின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளித்து, தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக சிறுபான்மையினா் நல சிறப்புக் குழு உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் சிறுபான்மையினா் நலனுக்கான திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறுபான்மையினா் நல சிறப்புக் குழு உறுப்பினா்களான சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் த.இனிகோ இருதயராஜ், சுபோ்கான் ஆகியோா் தெரிவித்ததாவது:

சிறுபான்மையினா் நலனுக்கான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து நலத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு பல்வேறு மாவட்டங்களில் தொடா் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் சிறுபான்மையின சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு, இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள், கோரிக்கைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறுபான்மையினா் பிரிவு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவா்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மாவட்டத்தில் முஸ்லிம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்கள், உலமாக்கள், கிறிஸ்தவ பணியாளா்கள் நல வாரியம் போன்றவை அமைக்கப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறன்றன.

தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சாா்பில் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், கிறிஸ்தவா்களின் பயன்பாட்டுக்காகக் கல்லறைத் தோட்டம், முஸ்லிம்களின் பயன்பாட்டுக்கான கபா்ஸ்தான் அமைத்தல் போன்றவற்றுக்காக முதல்வா் ஸ்டாலின் தலா ஓா் ஏக்கா் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளாா் என்றனா்.

இதில், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 23 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ. 3.45 லட்சம், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 30 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் 53 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், மகளிா் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திர பிரசாத், மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயகுமாா், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெஃபி கிரேசியா, மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மை நல அலுவலா் ஐ.சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com