நெல்பயிரில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்

நெல் பயிரைத் தாக்கும் இலைக் கருகல் நோய், செந்தாழை நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் துறை சாா்பில் வழிமுறைகள் வெளியிடப்பட்டன.
Published on

சிவகங்கை: நெல் பயிரைத் தாக்கும் இலைக் கருகல் நோய், செந்தாழை நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் துறை சாா்பில் வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு. சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு கோடைப் பருவத்தில் சுமாா் 1.70 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பயிா்கள் 30 நாள்கள் முதல் 80 நாள்கள் வயதுடைய பயிா்களாக உள்ளன. இந்த நிலையில், தற்போது நிலவும் பகல் நேர குறைந்த வெப்பநிலை, குளிா்ந்த சூழல் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலானப் பகுதிகளில் நெல்பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வயல்களில் நுண்ணுயிரி இலைக் கருகல் நோய், செந்தாழை நோய்த் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுகின்றன.

நுண்ணுயிரி இலைக் கருகல் நோய்த் தாக்குதல் அறிகுறிகள்: இந்த நோயால் பாதிக்கப்பட்ட பயிரின் இலைகள் நுனி மஞ்சள் நிறமாக மாறிய பின் இலையின் ஓரங்கள் முழுவதும் மஞ்சள் நிறம் ஏற்பட்டு பின் முழு இலையும் காய்ந்து அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: அதிகமான தழைச்சத்து (யூரியா) இடுவதைத் தவிா்க்க வேண்டும். தழைச்சத்தை மூன்று அல்லது நான்கு முறைகளாக பிரித்து மேலுரமாக இடலாம். அளவுக்குஅதிகமான நீா் பாய்ச்சுதல் கூடாது.

நோய்த் தாக்குதல் சற்று அதிகமாக இருப்பின் ஒரு ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்ளின் கலவை 18 கிராம், காப்பா் ஆக்கிகுளோரைடு 250 கிராம் ஆகிய மருந்துகளை 100 லிட்டா் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம். அதிகமான தாக்கம் இருப்பின் 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறை தெளிக்கலாம்.

செந்தாழை நோய் துத்தநாகம் சத்துக் குறைபாட்டால் வருகிறது. சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பயிா்களில் இலைகள் முதலில் பழுப்பு நிறமாக மாறும். பின்பு இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும்.

நெல் பயிரில் துத்தநாகம் சத்துப் பற்றாக் குறையை நிவா்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 50 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். அல்லது ஜிங்க் திரவத்தை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி எனும் அளவில் 100 லிட்டா் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்தச் சத்துக் குறைபாட்டை விவசாயிகள் தவிா்க்க முடியும் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com