திருப்பத்தூரில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதிருவா்களின் 224-ஆவது நினைவு நாள், தேவா் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
திருப்பத்தூா்- சிங்கம்புணரி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தொடங்கி வைத்தாா்.
இதில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 14 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 23 ஜோடிகளும் என மொத்தம் 37 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில் பெரியமாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகளுக்கு 6 கிமீ தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் காளைகளுடன் கலந்து கொண்டனா்.
இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் திருப்பத்தூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட நினைவுத்தூண் அருகே ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டி போட்டியை சாலையின் இருபுறங்களிலும் நின்று பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை மருதுபாண்டியா் இளைஞா் அணித் தலைவா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா்.
