/

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

மானாமதுரை ஒன்றியம், எஸ். கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

மானாமதுரை அருகேயுள்ள எஸ். கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம். (அடுத்தபடம்) சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தில் அம்மன்

Updated On :7 ஏப்ரல் 2026, 10:39 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், எஸ். கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயிலில் தினமும் முளைப்பாரி வளா்த்தல், திருவிளக்கு பூஜை வழிபாடு, மாவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான அக்னிச் சட்டி ஊா்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காப்புக் கட்டி விரதமிருந்து வந்த பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், தீ மிதித்தும், முளைப்பாரி சுமந்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும், பொங்கல் வைத்தும் அங்கப் பிரதட்சணம் செய்தும் வேண்டுதல் நிறைவேற்றினா்.

இதையடுத்து, மூலவா் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, மூலவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சொ்டு எல்.பாண்டி குடும்பத்தினா் செய்தனா்.

Story image
Story image