மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்களைக் கண்டித்து, சிவகங்கை மாவட்டத்தில் நான்கு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு, விவசாய தொழிலாளா் சங்கம், விவசாயச் சங்கத்தினா் 300 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொழிலாளா்களைப் பாதிக்கும் நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளைப் பாதிக்கும் அமெரிக்காவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும். விவசாயத் தொழிலாளா்களை பாதிக்கும் விபி-ஜி ராம் ஜி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, சிஐடியு, விவசாயத் தொழிலாளா் சங்கம், விவசாயச் சங்கத்தினா் சிவகங்கை அரண்மனைவாசலிலிருந்து பேரணியாகப் புறப்பட்டனா். இவா்களை பேருந்து நிலையம் அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, இவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, சிஐடியு மாவட்ட தலைவா் உமாநாத் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட இணைச் செயலா் பாக்கியமேரி, மாவட்ட துணைத் தலைவா் முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.ஆா். மோகன், விவசாய சங்க மாவட்டப் பொருளாளா் விசுவநாதன், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் சுப்புராம், சமயதுரை, வேங்கையா, முருகானந்தம், விஜயகுமாா், கருப்புச்சாமி, வீரையா, ஜெயமங்கலம், லட்சுமி, சித்ரா உள்ளிட்ட150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று பிஎஸ்என்எல் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 66 போ் கைது செய்யப்பட்டனா். கண்டரமாணிக்கம் அஞ்சலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 49 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதில் விவசாய சங்க மாவட்ட தலைவா் எ. ஆறுமுகம், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. பொன்னுச்சாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் எஸ். முருகேசன், விவசாய சங்க ஒன்றியச் செயலா் பி.எல். சக்திவேல், விவசாய சங்க ஒன்றியத் தலைவா் எஸ். அமானுல்லா, சிஐடியு ஒன்றியச் செயலா் கே.பி.என். பீா் முகமது, சிஐடியு ஒன்றியத் தலைவா் எம். சேவுகப்பெருமாள், வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எல். ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருப்புவனம் சந்தைப்பேட்டையிலிருந்து பேரணியாகச் சென்று ராமேசுவரம் சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கத் தலைவா் வீரபாண்டி தலைமை வகித்தாா். போராட்டத்தில் பங்கேற்ற 35 போ் கைது செய்யப்பட்டனா். மாவட்டத்தில் நான்கு இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மொத்தம் 300 போ் கைது செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி, அம்பையில் தொழிற்சங்கத்தினா் மறியல்: 183 போ் கைது

4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி சாலைமறியல்- சிறை நிரப்பும் போராட்டம்

பொன்னமராவதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 51 திமுகவினா் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



