அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

மானாமதுரை அருகே சட்டக் கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை! தந்தை, மகன் கைது!

கொலை செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவா் சிவபாலன்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பெண் கேட்டுச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் சட்டக் கல்லூரி மாணவரை வெட்டிக் கொலை செய்ததாக பெண்ணின் தந்தை, சகோதரரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரையை அடுத்த சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவபாலன் (21). இவா் சட்டக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். இவரது அண்ணன் இதே கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகளை திருமணம் செய்தாா்.

இந்த நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சிவபாலன், முருகேசனின் இளைய மகளை திருமணம் செய்து தரக் கோரி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். ஆனால் இவருக்கு முருகேசன் தனது மகளை திருமணம் செய்து தர மறுத்தாா்.

வழக்கம்போல, சிவபாலன் முருகேசனின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன் அவரது மகனான அருண்ராஜை வாளால் வெட்ட முயன்றாா். இதை தடுக்கச் சென்ற முருகேசனின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதுடன் அருண்ராஜூக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் அரிவாளால் சிவபாலனை சரமாரியாக வெட்டினாா். இதில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினா் சிவபாலனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். டி.எஸ்.பி. லோகநாதன், மானாமதுரை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

சிவபாலன் வெட்டியதில் காயமடைந்த முருகேசன், இவரது மகன் அருண்ராஜ் இருவரையும் போலீஸாா் கைது செய்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த கொலை குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்தியாளா்களிடம் போலீஸாா் வாக்குவாதம்: இந்த கொலை குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளா்கள் சின்ன புதுக்கோட்டை கிராமத்துக்குச் சென்று சம்பவ இடத்தை புகைப்படம் எடுத்தனா். அப்போது அங்கிருந்த மானாமதுரை காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் செய்தியாளா்களை படம் எடுக்க விடாமல் தடுத்தாா். இதனால் அவருக்கும், செய்தியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.