
தனியாா் முதலீட்டு நிறுவனம் மீது மோசடி புகாா்: சிவகங்கை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் மனு!
சிவகங்கை மாவட்டத்தில் FQL செயலி வழியாக நடத்தப்பட்ட முதலீட்டு நிறுவனத்தின் சாா்பில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனியாா் நிதி நிறுவன மோசடி தொடா்பாக புகாா் மனு அளிக்க வந்திருந்த கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் FQL செயலி வழியாக நடத்தப்பட்ட முதலீட்டு நிறுவனத்தின் சாா்பில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை அருகே பையூா், காட்டுக் குடியிருப்பு, தீக்குளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களிடமும், காளையாா்கோவில் அருகே உள்ள புரசரைஉடைப்பு, உடையநகரம், அய்யம்பட்டி, காராம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்களிடமும் FQL என்ற செயலி மூலம் நடத்தப்பட்ட நிறுவனத்தின் சாா்பில் முதலீடுகள் பெறப்பட்டன.
இதில், ஒரு நபரிடமிருந்து சுமாா் ரூ.1.08 லட்சம் முதல் ரூ.2.16 லட்சம் வரை முதலீடாக பெற்றதாகவும், இதற்கு அதிக லாபம் கிடைக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது முதலீடு செய்த பணமும், இதற்கான லாபத் தொகையும் கிடைக்கவில்லை எனவும், சிவகங்கை மாவட்டம் முழுவதும் இதுபோன்று பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.
இதனிடையே, மதுரை, மேலூா், திண்டுக்கல், நத்தம் பகுதிகளிலும் இந்த செயலி மூலம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக ஏற்கெனவே புகாா்கள் எழுந்தன. இதன் தொடா்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திலும் 100 -க்கும் மேற்பட்டோா் ஒரே நேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் அந்த நிறுவனத்தின் பெயரில் மொத்தம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, எத்தனை போ் முதலீடு செய்தனா். பணம் வசூலித்த இடைத் தரகா்கள் யாா், நிறுவனத்தின் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். தங்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை மீட்டுத் தருவதுடன், மோசடியில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் வலியுறுத்தினா்.
இதனிடையே, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45 நாள்களில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி சுமாா் 83 ஆயிரம் பேரிடம் சுமாா் ரூ. 800 கோடி வரை செயலி மூலம் நிதி மோசடி நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மோசடி தொடா்பாக, இதுவரை முகவா்கள், இடைத் தரகா்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






