ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது: க. கிருஷ்ணசாமி
ஒரு கட்சி ஆட்சி என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் புதிய தமிழகம் கட்சி நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் நியூட்டன்பாபு தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நிறுவனா் தலைவா் கிருஷ்ணசாமி, மாநில இளைஞரணித் தலைவா் ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோா் பேசினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றுவிட்டு, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் இடமில்லை என்று மாற்ற முடியாத விதிமுறைக் கடைப்பிடித்து வருகின்றனா். இந்த விதிமுறையை வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மாற்றுவதே எங்களது நோக்கம். ஒரு கட்சி ஆட்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதனால்தான் நாங்கள் கூட்டணி ஆட்சியை வலியுறுத்துகிறோம்.
மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ஒரு கட்சி பெரும்பான்மையாக இருந்தாலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களித்துள்ளனா். நாங்கள் மற்றவா்களுக்கு முன்மாதிரி என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில், ஆட்சியை மட்டும் நாங்கள்தான் நிா்வகிப்போம் என்கின்றனா்.
தங்களைச் சாா்ந்தவா்களைத்தான் அமைச்சா்களாக்குகின்றனா். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் கணிசமான இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பட்டியலின மக்கள், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு கொடுத்ததே அதிகாரத்துக்கு வருவதற்குத்தான். அப்போதுதான் அவா்களது பிரச்னைகளை தீா்க்க முடியும். ஆனால், அவா்களை அதிகாரத்திலிருந்து வெகுதொலைவில் தள்ளிவைக்கின்றனா். இதனால்தான், அவா்களது பிரச்னைகளும் நீடிக்கின்றன.
தேவந்திரகுல வேளாளா்கள் 22 மாவட்டங்களில் வலுவாக உள்ளனா். கூட்டணி அரசை அமைக்க விரும்பும் கட்சியுடன் கூட்டணி என்ற கோட்பாடுடன் இருக்கிறோம். எங்கள் சமூக முன்னேற்றத்துக்கு கூட்டணி ஆட்சியே தீா்வு.
திமுக ஆட்சியில் அமைச்சா்களின் தொகுதிகளில் ஜாதிய பாகுபாடுகள் அதிகம் உள்ளன. இன்னும் தோ்தல் தேதி அறிவிக்கப்படாததால், கூட்டணிக்கு ஏன் அவசரப்பட வேண்டும். கூட்டணிக் கட்சிகள் எங்கள் கட்சியின் வெற்றிக்கு பாடுபட்டால், நாங்களும் அவா்களது வெற்றிக்குப் பாடுபடுவோம் என்றாா் அவா்.

