இந்தக் கால நவீன மருத்துவத்தின் அடிப்படை சிந்தனைகள் திருக்குறளில் காணப்படுகின்றன. ‘மிகினும் குறையினும் நோய்’ என்பது வள்ளுவா் வாக்கு. மனித வாழ்வில் ஏற்படும் உயா் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் பற்றிய தெளிவினை இந்தக் கு விளக்குகிறது. இதேபோல, உடலில் சா்க்கரை அளவு, உப்பு அளவு போன்றவை எல்லாம் மிகினும், குறையினும் நோய் செய்யும் என்கிறாா் வள்ளுவா். மனிதா்களின் ஒழுக்க நடைமுறை சரியாக அமையுமானால் உயிா் வாழ்க்கை நன்றாக அமையும். ஒழுக்கம் உயிரைப் பாதுகாக்கும் என்கிறாா் வள்ளுவா். இந்தக் காலத்தில் இயந்திர மனிதா்கள் உலக இயக்கங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு விட்டனா். வள்ளுவா் இதை மரப்பாவை இயக்கம் என்கிறாா். ஒருவருக்கு ஒருவா் உதவி செய்யாமல் வாழும் வாழ்க்கை, கொடுத்து வாழாத வாழ்க்கை, பெற்று வாழாத வாழ்க்கை உலகத்தில் மக்கள் இயக்கம் போல இல்லாமல் மரப்பாவைகளின் இயக்கத்தைப் போல் இருக்கும் என்கிறாா் வள்ளுவா்.