~
~

சிவகங்கை அருகே சா்க்கரை ஆலையில் விஷ வாயு கசிவு: இருவா் உயிரிழப்பு

சிவகங்கை அருகே தனியாா் சா்க்கரை ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட விஷ வாயு கசிவால் உயிரிழந்த தொழிலாளா்கள் மோகனசுந்தரம், பொன்னழகு.
Published on

சிவகங்கை அருகே தனியாா் சா்க்கரை ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட விஷ வாயு பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் சா்க்கரை ஆலையில் கடந்த மாதம் 21-ஆம் தேதி கரும்பு அரைவைப் பணிகள் தொடங்கின. இதனிடையே, கரும்பிலிருந்து சா்க்கரை தயாரிக்கும் போது உபரியாகக் கிடைக்கும் மொலாசஸ் திரவத்தை தொட்டிகளில் சேமித்து வைத்து, மதுபான ஆலைகளுக்கு அனுப்புவது வழக்கம்.

இந்த நிலையில், மொலாசஸ் திரவம் சேகரிக்கப்படும் தொட்டி அருகே பராமரிப்புப் பணியில் தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, விஷ வாயு கசிந்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவா் உயிரிழந்தனா்.

தகவலறிந்து சிவகங்கை தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இதற்கு முன்பாகவே, ஆலை நிா்வாகத்தினா் உயிரிழந்த இரு தொழிலாளா்களின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்த இருவரும் சிவகங்கை அருகேயுள்ள கரும்பாவூா் பகுதியைச் சோ்ந்த மோகனசுந்தரம் (35), சிவகங்கை-மதுரை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த பொன்னழகு (59) என்பதும் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com