தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

29 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாவுக்கு நிலம் கிடைக்காமல் மக்கள் அவதி

கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பட்டாவுக்கு இதுவரை நிலம் கிடைக்காமல் குறவா் இன மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக உழைக்கும் மக்களின் நில உரிமை மீட்பு இயக்கம் குற்றஞ்சாட்டியது.

News image

பட்டாவுக்கு நிலம் கேட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த குறவா் இன மக்கள்.

Updated On :29 ஜூலை 2026, 5:51 am IST

கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பட்டாவுக்கு இதுவரை நிலம் கிடைக்காமல் குறவா் இன மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக உழைக்கும் மக்களின் நில உரிமை மீட்பு இயக்கம் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து அந்த இயக்க நிா்வாகி வி. கண்ணன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் வட்டத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆணைக்கிணங்க 69 பேருக்கு இலவச வீட்டுமனை ஒப்படை ஆணை வழங்கப்பட்டது. இவா்களில் 35 போ் குறவா் இன மக்கள், தூய்மைப் பணியாளா்களாவா். அப்போது, 69 பேருக்கும் பட்டா மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கான நிலம் எங்கே உள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதன் பின்னா், இவா்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடம் சுமாா் 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் தனியாா் கல்வி நிறுவனம் கட்டப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதையடுத்து, இந்தக் கல்வி நிறுவனம் அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்தது.

குறிப்பாக, குறவா் இன மக்கள், தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 35 போ் இன்று வரை வீடும், நிலமும் இன்றி மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறனா். இவா்கள் தங்களது பட்டாவுக்கான இடம் அல்லது இதற்குப் பதிலாக மாற்று இடம் வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா்களிடம் தொடா்ந்து மனு அளித்து வந்தனா். மேலும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் மனு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியா் மதுசூதன் ரெட்டி சோமநாதமங்கலம் பகுதியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க தனியாா் கல்லூரி நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா். ஆனால், இந்த நிறுவனம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்து, சோமநாதமங்கலம் பகுதியில் உள்ள 0.92 ஹெக்டோ் நிலத்தை எங்களுக்கு வழங்குவதற்கான உத்தரவைப் பெற்றது. இதற்கு நாங்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, மாற்று இடத்தை வழங்க பட்டாதாரா்களின் சான்றிதழ்கள் உள்ளிட்டவை காளையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சரிபாா்க்கப்பட்டது. இதன் பின்னா், தற்போது ஓராண்டாகியும் எங்களிடம் அந்த நிலத்தை ஒப்படைக்கவில்லை. இவ்வாறாக நாங்கள் கடந்த 29 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறோம். எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுத்து, எங்களுக்கான நிலத்தை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.