சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சரக்கு வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு தொழிலாளா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
திருப்புவனம் பகுதியில் கடந்த 10-ஆம் தேதி மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலை சீரமைப்புப் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். பின்னா், பணி முடிந்து இவா்கள் சரக்கு வாகனத்தில் ஏறி தங்கிய அறைக்கு சென்று கொண்டிருந்தனா். வன்னிக்கோட்டை பகுதியில் சென்றபோது, ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்து இவா்கள் சென்ற சரக்கு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிவா (40), பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்கிஷோா் படேல் (22) ஆகிய இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.







