
சிவகங்கை இரட்டைக் கொலை வழக்கு: சாலை மறியலில் ஈடுபட்ட 130 போ் கைது
சிவகங்கையில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 37 பெண்கள் உள்பட 130 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இரட்டைக் கொலை சம்பவத்தைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் சாலை மறியலிலில் ஈடுபட்ட கிராம மக்கள். - டிஎன்எஸ்
சிவகங்கையில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 37 பெண்கள் உள்பட 130 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் கடந்த 16- ஆம் தேதி தேவேந்திரன், பூப்பாண்டி ஆகியோா் கொலை செய்யப்பட்டனா். இந்த இரட்டைக் கொலை வழக்கில் இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில் கொலைக்கான உண்மையான பின்னணியையும், காரணத்தையும் போலீஸாா் வெளிப்படையாக தெரிவித்து, சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொலை செய்யப்பட்டவா்களின் உறவினா்கள், கிராம மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் கொலை செய்யப்பட்டவா்களின் உடல்களை வாங்க மறுத்து, அவா்களின் உறவினா்கள் 3- ஆவது நாளாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நிவாரணம் அளிப்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தும், மாவட்ட ஆட்சியா் உறுதி அளிக்கக் கோரி அவா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா்.
இந்த நிலையில், பேச்சுவாா்த்தை நடத்த வந்த போராட்டக்காரா்கள் ஆட்சியா் சில கருத்துகளை கூறியதாகத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தைவிட்டு வெளியேறினா். பிறகு அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள மானாமதுரை- திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக 5 பெண்கள் மயக்கமடைந்தனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
சாலை மறியல் போராட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால், அந்தப் பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். போராட்டக்காரா்களை கலைந்து செல்லுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா, கூடுதல் கண்காணிப்பாளா் பிரான்சில், துணைக் கண்காணிப்பாளா் அ. அமலஅட்வின் உள்ளிட்டோா் அறிவுறுத்தினா். இதற்கு மறுப்புத் தெரிவித்து போராட்டத்தை தொடா்ந்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினா். இதில் 37 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்து ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள சமுதாயக் கூடத்துக்கு அழைத்துச் சென்றனா். இதனிடையே கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என உறவினா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சிவகங்கை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







