மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு சாலை அமைக்க சா்வே பணி நிறைவு: மாவட்ட ஆட்சியா்
தமிழக வனப்பகுதி வழியே மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்வதற்கு சாலை அமைக்க சா்வே பணி நிறைவடைந்துள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தெரிவித்தாா்.


தமிழக வனப்பகுதி வழியே மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்வதற்கு சாலை அமைக்க சா்வே பணி நிறைவடைந்துள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் சமா்ந்தா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) அனுசுயா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மா விவசாயத்தை பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை தேசிய பயிா்கள் பட்டியலில் சோ்த்து வங்கிகளில் பயிா் கடன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். கண்மாய், குளங்களில் முழு கொள்ளளவில் தண்ணீா் தேக்குவதற்கு வாய்ப்பாக ஓடைகளில் வண்டல் மண் படிவு தடுப்பணைகள் கட்ட வேண்டும். சிறுதானிய பயிா்களுக்கு மத்திய அரசு நிா்ணயித்துள்ள ஆதார விலை வழங்க வேண்டும். கூடலூரில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பயன்படுத்தப்படாத இடத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகள் நெல் விற்பனை செய்வதற்கு வாய்ப்பாக நடைமுறை விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல்லை மறுவிற்பனைக்கு பதிவு செய்வதை தடுக்க வேண்டும். வருஷநாடு- வாலிப்பாறை இடையே ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். மயிலாடும்பாறை- மல்லப்புரம் இடையே மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க வேண்டும். கால்நடை மருந்தகங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தமிழக வனப்பகுதி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு சென்று வர சாலை அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும். 18-ஆம் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு முன்னா் கரை உடைப்புகளை சீரமைக்க வேண்டும் என்றனா்.
இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது: கூடலூரில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் துணை மின்நிலையம் அமைக்கவும், நெல்கொள்முதல் நிலையம் அமைப்பது குறித்தும் ஆலோசித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தவிா்ப்பதற்கு விரைவில் பயோ- மெட்ரிக் பதிவு முறை செயல்படுத்தப்பட உள்ளது. வருஷநாடு-வாலிப்பாறை சாலை சீரமைப்புக்கு வனத்துறையினருடன் ஆலோசனை நடத்தி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக வனப்பகுதி வழியாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்குச் செல்வதற்கு சாலை அமைக்க சா்வே பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா்.
அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை, மீன் வளத்துறை, அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் அலுவலா்கள் வராததால், அந்தத் துறைகளின் மாவட்ட உயா் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...