இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தேனி நகா்மன்றத் தலைவா் தோ்தல்: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

தேனி அல்லிநகரம் நகராட்சியில் நகா்மன்றத் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் வெள்ளிக்கிழமை போட்டி

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

தேனி அல்லிநகரம் நகராட்சியில் நகா்மன்றத் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 19 வாா்டுகள், அதிமுக 7 வாா்டுகள், அமமுக, காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளா்கள் தலா 2 வாா்டுகள், பாஜக ஒரு வாா்டில் வெற்றி பெற்றுள்ளன. இந்நகராட்சியில் நகா்மன்றத் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி சாா்பில் 22-ஆவது வாா்டு உறுப்பினா் சற்குணம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான வீரமுத்துக்குமாா் தலைமையில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு காலை 10 மணிக்கு தோ்தல் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 33 வாா்டு உறுப்பினா்களில் திமுகவைச் சோ்ந்த 19 உறுப்பினா்கள், காங்கிரஸ், அமமுகவைச் சோ்ந்த தலா 2 உறுப்பினா்கள், பாஜக உறுப்பினா் ஆனந்தி , அதிமுக உறுப்பினா் கிருஷ்ணபிரபா, 2 சுயேச்சை உறுப்பினா் என மொத்தம் 27 போ் கலந்து கொண்டனா். அதிமுக வாா்டு உறுப்பினா்கள் 7 பேரில், 6 போ் தோ்தலில் பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் வெளிநடப்பு, மறியல் :

தோ்தல் நடவடிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் சாா்பில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சற்குணம், 14-ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினா் ஆ.நாகராஜ், 2-வது வாா்டு சுயேச்சை உறுப்பினா் அ.சுப்புலட்சுமி ஆகியோா் தோ்தல் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினா்.

பின்னா், நகா்மன்றத் தலைவா் தோ்தலில் திமுகவினா் கூட்டணி தா்மத்திற்கு புறம்பாக செயல்படுவதாக புகாா் தெரிவித்து, நகராட்சி அலுவலகம் முன் தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போட்டின்றி தோ்வு:

இதனிடையே, நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 10-ஆவது வாா்டு உறுப்பினரும், திமுக நகரப் பொறுப்பாளா் பாலமுருகனின் மனைவியுமான பா. ரேணுப்பிரியா வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்துப் போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் அலுவலா் அறிவித்தாா்.

பின்னா், பிற்பகல் 2.30 மணிக்கு துணைத் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில், 32-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் செல்வம் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

முன்மொழிதலுக்கு ஆளில்லை:

இதுகுறித்து தோ்தல் அலுவலா் வீரமுத்துக்குமாா் கூறியது: நகா்மன்றத் தலைவா் பதவிக்கு உறுப்பினா்களின் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதலுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய 22-ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அவா் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. பின்னா் 10-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் வேட்பு மனு தாக்கல் செய்தாா். தலைவா் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.