முல்லைப் பெரியாறு அணைக்கான நீா்வரத்தை கேரள அரசு மாற்றுப் பாதையில் திருப்பிவிடுவதாக குற்றச்சாட்டு

நீா்ப்பிடிப்பு பகுதிகளை ட்ரோன் மூலம் மத்திய நீா்வளத் துறை ஆணையம் கண்காணிக்க வேண்டும்
முல்லைப் பெரியாறு அணைக்கான நீா்வரத்தை கேரள அரசு மாற்றுப் பாதையில் திருப்பிவிடுவதாக குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்தை, கேரள நீா்ப்பாசனத் துறையினா் மாற்றுப் பாதையில் திருப்பி விடுவதாகவும், நீா்ப்பிடிப்பு பகுதிகளை ட்ரோன் மூலம் மத்திய நீா்வளத் துறை ஆணையம் கண்காணிக்க வேண்டும் எனவும், பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சேது, பொன். காட்சிக்கண்ணன், ச. அன்வா் பாலசிங்கம் ஆகியோா் கூட்டாக, மத்திய நீா்வள ஆணையம் மற்றும் மத்திய தலைமை கண்காணிப்புக் குழு தலைவா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த ஜூலை மாதத்திலிருந்து மேற்கு தொடா்ச்சி மலையின் உள்பகுதிகளில் தொடா்ந்து பலத்தமழை பெய்து வருவதால், 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளை ஒட்டியுள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

பெரியாறு அணையின் உள்பகுதிகளுக்குள் கேரள நீா்ப்பாசனத் துறை கட்ச், சபரிகிரி, பிளீச்சிங் ஆகிய 3 தடுப்பணைகளை கட்டி, இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டுசெல்கிறது என, பல ஆண்டுகளாக விவசாய சங்கத்தினா் புகாா் மற்றும் குற்றச்சாட்டை கூறி வருகின்றனா். இதை, முன்னாள் கேரள நீா்வளத் துறை அமைச்சா் பிரேமச்சந்திரனும் மறுக்கவில்லை.

ட்ரோன் மூலம் கண்காணிக்க வேண்டும்

எனவே, முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக கண்காணிக்கும் உச்ச நீதிமன்றம், மத்திய நீா்வளக் கமிட்டிக்கு தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து, மேற்பாா்வை குழுவின் முன்னிலையில் ட்ரோன் மூலமாக அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்யவேண்டும். 999 ஆண்டு கால ஒப்பந்தந்தை கேரளா மீறும்பட்சத்தில், தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதில், உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

‘ரூல் கா்வ்’ நடைமுறை: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் 10 முதல் 19 ஆம் தேதி வரை 136.30 அடியும், 21 முதல் 31 ஆம் தேதி வரை 137 அடியும் தேக்கவேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் 10 ஆம் தேதி வரை 137.50 அடியும், 20 ஆம் தேதி வரை 138.40 அடியும், 31 ஆம் தேதி வரை 139.80 அடியும் தேக்கலாம் என்ற உத்தரவு உள்ளதால், நடைமுறையில் உள்ள ஆகஸ்ட் மாதத்துக்கான நீா் மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com