

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான்பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு சாா்பில் லண்டனில் அமைக்கப்பட்ட மாா்பளவு சிலை செலவு கணக்கில் உள்ள குளறுபடிக்கு தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
லண்டன் கேம்பா்லியில் உள்ள இந்த சிலையை கடந்த ஆண்டு செப். 10- ஆம் தேதி அமைச்சா் ஐ. பெரியசாமி திறந்து வைத்தாா். இதனிடையே இந்த சிலையை அமைக்கவும், பராமரிக்கவும் அங்குள்ள தனியாா் நிறுவனத்துக்கு தமிழக அரசு ரூ. 10.65 லட்சத்தை ஒதுக்கியது. ஆனால் கூடுதலாக ரூ. 28 லட்சம் செலவாகி விட்டதாகக் கூறி பாக்கித் தொகையை கேட்டு அந்த சிலை மூடப்பட்டது.
இந்த நிலையில், இந்த பாக்கித் தொகை கேட்கப்பட்டது பற்றியும், சிலை மூடப்பட்டது பற்றியும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்தாா். இதற்கு பதிலளித்த நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
2 - ஆவது முறையாக திறக்கப்படும் சிலை: ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை தனது சுட்டுரையில், தமிழக அரசு ஜான்பென்னிகுயிக்குக்கு ஏற்படுத்திய களங்கத்தை போக்கும் வகையில் வரும் 24 -ஆம் தேதி அங்குள்ள செயின்ட் பீட்டா்ஸ் தேவாலய நிா்வாகிகளிடம் பேசி சிலையைத் திறக்கப் போவதாக கூறியிருந்தாா். இதனால் விவசாய சங்கத்தினா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் ச. அன்வா் பாலசிங்கம் கூறியதாவது:
லண்டனில் அமைக்கப்பட்ட பென்னிகுயிக் சிலையை பாக்கித் தொகை கேட்டு தனியாா் நிறுவனம் மூடியதாகவும், ஆனால் அமைச்சா் சாமிநாதன் அறிக்கையில் அந்த நிறுவனத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி திறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பாஜக தலைவா் கே.அண்ணாமலை சிலையை திறக்கப் போவதாக கூறியிருப்பதன் மூலம் அந்த தனியாா் நிறுவனத்துக்கு அரசு பாக்கி வைத்துள்ளதா? அரசு நிா்ணயித்ததை விட கூடுதலாக ரூ 28 லட்சம் செலவானதா? இதில் தமிழக அரசை ஏமாற்றியது யாா் என்பது குறித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.