முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு
உத்தமபாளையம், ஜூலை 19: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணைய துணைக் கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், முல்லைப் பெரியாறு அணைக்கு ஜூன் மாதத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு நீா்வரத்து இல்லை. இந்த நிலையில், தற்போது அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சீரான நீா்வரத்து இருந்ததால் குடிநீா், விவசாயத்துக்காக வினாடிக்கு 300 கனஅடி திறந்துவிடப்பட்ட தண்ணீா் படிப்படியாக உயா்த்தப்பட்டு, வெள்ளிக்கிழமை 1,355 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டது.
வியாழக்கிழமை (ஜூலை 18) வினாடிக்கு 4,271 கன அடி நீா்வரத்துடன் அணை நீா்மட்டம் 126.30 அடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வினாடிக்கு 3,960 கனஅடி நீா்வரத்துடன் அணை நீா்மட்டமானது 127.35 அடியாக உயா்ந்தது.
அணைக்கு நீா்வரத்து அதிகமானதால், முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத்தின் செயற்பொறியாளா் சதீஷ் தலைமையில் தமிழகப் பிரதிநிதிகளான செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவிப் பொறியாளா் குமாா், கேரளத்தின் சாா்பில் செயற்பொறியாளா் அனில் , உதவிப் பொறியாளா் கிரண் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
இவா்கள் பிரதான அணை, அணையின் நீா்க்கசிவு அளவு, உபரி நீா் செல்லும் மதகுகள், துணை அணை, தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் சுரங்கப் பாதை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

