அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இவை வயிற்றில் அடிக்கும் பகைகள் அல்லவா?

முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்டங்களின் உயிர்நாடி! அந்த அணையின் பயன் தமிழ்நாட்டுக்கு உரியது எனினும், அந்த அணை இருப்பது தமிழ்நாட்டை ஒட்டிய கேரள எல்லையில்!

News image
முல்லைப் பெரியாறு
Updated On :3 மார்ச் 2026, 10:10 pm

தினமணி செய்திச் சேவை, பழ . கருப்பையா

முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்டங்களின் உயிர்நாடி! அந்த அணையின் பயன் தமிழ்நாட்டுக்கு உரியது எனினும், அந்த அணை இருப்பது தமிழ்நாட்டை ஒட்டிய கேரள எல்லையில்!

எம்மான் காந்தி இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற, 1920-லேயே கண்டறிந்த திட்டமான மொழி வழி மாநிலங்களின் அமைப்பு, விடுதலை பெற்ற இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டபோதுதான் கேரளம், கருநாடகம், ஆந்திரம் முதலிய மாநிலங்கள் தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மாநிலங்களாயின!

மொழி வழி மாநிலம் என்பது அந்தந்த மொழி பேசும் மக்கள் அந்தந்த மாநிலத்தோடு இணைக்கப்படுவதுதான்!

குமரி மாவட்டம் திருவாங்கூர் அரசின் கீழ் இருந்தது என்றாலும், முற்ற முழுக்கத் தமிழ் பேசுகின்ற மக்களைக் கேரளத்தோடு வைத்திருந்து வகை செய்ய முடியாது என்பதால் அதை மலையாளிகள் விட்டுவிட்டார்கள்!

இதே போல் மலைப் பகுதியான, மூணாறு மாவட்டம் என்று கேரளத்தில் இப்போது அறியப்படுகிற பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிற தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் முற்ற முழுக்கத் தமிழர்கள் வாழும் பகுதி! இன்றைக்கும் அவை தமிழ்ப் பகுதிகள்தாம்!

தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகள் எனினும், ஏற்றுமதிப் பொருள்கள் விளையும் அவற்றின் மலைவளம் காரணமாக, அன்று மைய அரசில் செல்வாக்கு மிக்கவர்களாய் இருந்த மலையாளிகள் அவற்றைக் கேரளத்தோடு இணைத்துவிட்டார்கள்!

காமராசர் போன்ற இணையற்ற தலைவர்களுக்கு, இந்தியா பல நாடுகளின் இணைப்பு நாடு அன்று; அது ஒரே நாடுதான் என்பது எண்ணம்! எது எங்கே இருந்தால் என்ன? இந்தியாவுக்குள்ளேதானே இருக்கிறது! பாக்கித்தானுக்கா அந்த ஊர்களைக் கொடுத்துவிட்டோம்? இப்படித்தான் அவர் சிந்தித்தார்!

அதன் பிறகு தேவிகுளம், பீர்மேடு ஆகிய ஊர்களில் வாழும் தமிழர்கள், இன்னொரு அரசின் கீழ் சிறுபான்மையராய் ஆகிவிட்டது ஒருபுறம்; டாலரை ஈட்டும் மண் பறி போய்விட்டது என்பது இன்னொரு புறம்! எல்லாவற்றையும் விடக் கொடுமை ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் போய்விட்டது என்பதுதான்!

அதன் பயன் தமிழ்நாட்டுக்குத்தான் என்னும் நிலை மாறவில்லை என்றாலும், அவன் கதவைத் திறந்துவிட்டால்தான் முல்லைப் பெரியாறு அணையில் நாம் சிறு துவாரத்தைக்கூட அடைக்க முடியும்!

இந்தியா முழுவதையும் காங்கிரசு ஆண்டதாலும், காமராசர் போன்ற தலைவர்கள் கதவை எதுக்கு மூடுறேண்ணேன்? எனக் கேரளத்தை அதட்டிக் காரியம் செய்யும் செல்வாக்கில் இருந்ததாலும், அந்த அணை தமிழ்ப் பகுதிக்குள் இருப்பது போன்றே இருந்தது!

தேசம் ஒன்றுதான் என்றாலும் மாநிலங்கள் வேறு வேறு; ஆகவே வாயும் வயிறும் வேறு வேறுதான் என்னும் நிலை ஏற்பட்டது.

அந்த அணை எங்கள் மண்ணிலுள்ள அணை எனப் பேசத் தொடங்கினான் கேரளத்தை ஆண்டவன்!

இப்படி ஒரு காலம் வரும் என்று எதிர்பார்த்த கண்ணதாசன், எல்லைகள் வகுக்கப்பட்ட காலத்தில் தமிழர்கள் வாழும் தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் கேரளத்துக்குக் கொடுத்ததைக் கடுமையாகச் சாடிப் பாடுகிறான்!

"மேடும் குளமும் கேரளர்க்காயின

ஆடும் மாடும் அமைச்சர்களாயின'

காங்கிரசு மந்திரிகளை ஆடு, மாடுகள் என வசைபாடுகிறான். ஏனெனில் மண் இழப்பு அத்தகையது!

தமிழ்நாட்டுக்குரிய முல்லைப் பெரியாறை உள்ளடக்கித் தேவிகுளம், பீர்மேட்டை உள்ளடக்கித் தமிழ்நாட்டின் எல்லையை வகுக்கவில்லையே! தேவிகுளம், பீர்மேடு பறிபோய்விட்டன! ஆனால், முல்லைப் பெரியாறு இன்னும் நம் உடைமை அல்லவா!

ஆனால், அதனைப் பராமரிக்க, ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்துக்கு தில்லி உச்சநீதிமன்றத்திற்குப் போக வேண்டியதிருக்கிறது! தில்லி என்ன திருத்தணிக்குப் பக்கத்திலா இருக்கிறது? அப்படியே போனாலும் உத்தரவை உடனே போட்டு விடுகிறதா உச்சநீதிமன்றம்? அப்படியே போட்டாலும் கேரளாக்காரன் உடனே கேட்டுவிடுவானாக்கும்?

அணை வலுவாக இருக்கிறது; நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உத்தரவு போட்டதே நீதிமன்றம்! நீர்மட்டத்தை ஏற்ற விட்டிருக்கின்றானா கேரளாக்காரன்!

அணையை வலுப்படுத்தவும், பராமரிப்புப் பணிகளைச் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டு ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது!

2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அணையை வலுப்படுத்த பிறப்பித்த உத்தரவை இன்று வரை நடைமுறைப்படுத்த முடியவில்லை; இது என்ன சட்டத்தின் ஆட்சி? நம்முடைய திராவிட மாடல் அரசு, வருடா வருடம் அதே கோரிக்கைகளை வைத்து உச்சநீதிமன்றத்திற்குப் போகிறது!

மரங்களை வெட்ட மாட்டேன் என்கிறான்; அணையை வலுப்படுத்த அதில் சேர்ந்துள்ள மணலை அள்ள விடமாட்டேன் என்கிறான்! 2014-இல் இருந்து நீங்களும் உத்தரவு மேல் உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; எல்லா உத்தரவுகளையும் தன் இருக்கைக்குக் கீழே போட்டு உட்கார்ந்து கொள்கிறான் என்று திராவிட மாடல் ஒப்பாரி வைத்து ஆகப் போவதென்ன?

பராமரிப்புச் செய்ய அனுமதிக்காவிட்டால், ஒரு நாள் அணை உடைந்துவிடும் என்று அவன் எதிர்பார்க்கிறான்! பொதுவுடைமை ஆட்சியின் மாணப் பெரிய சர்வதேசச் சிந்தனை இது! அற்பர்கள்!

இங்கே பொதுவுடைமைக் கட்சிகளோடு கூட்டு!

இதே நிலைதான் கருநாடகத்துக் காங்கிரசு ஆட்சி மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதும்!

பெங்களூர்க்கு குடிநீர் வேண்டுமாம்; நீண்டு ஓடுகின்ற காவிரியில் ஏதோ ஒரு இடத்தில் நீரேற்றிக் குழாய் பதித்துக் கொண்டு போக மாட்டானாம்! இதற்கு அணை கட்டுவானாம் அவன்! குடிநீருக்கு அணையே கட்டும் இவ்வளவு அறிவு வேறு எவனுக்கு இருக்கிறது? அவனுடைய நோக்கம் குடிநீர்த் தேவை இல்லை! புதிய விளைநிலங்களை உருவாக்குவது! அதையும் மீறிப் பெருகி வழிந்தால் மட்டுமே கொடுப்பது!

இந்தக் கேடு கெட்ட சிந்தனைப் போக்கு நாயக்கர்கள் ஆட்சிக் காலத்திலும் கருநாடகத்தானுக்கு இருந்தது. அப்போதே புதிய அணையைக் கட்டிவிட்டான்!

பொறுக்க முடியாத நாயக்க மன்னர்கள் அணையை உடைப்பது என்று படை எடுத்துப் போனார்கள்! நாடு பிடிக்கப் படையெடுப்பதுண்டு; அணையை உடைக்க நடந்த வரலாற்றுப் படையெடுப்பு அது மட்டும்தான்!

திண்டுக்கல்லைத் தாண்டி நம்முடைய படை போகும்போது, அணை உடைந்து தமிழ்நாட்டுக்கு நீர் வந்துவிட்டது! இந்தச் செய்தியை அறிந்து, படையெடுப்புத் தேவை இல்லை என்று திரும்பிவிடுகிறார்கள்!

அன்றிருந்த அதே புத்திதான் இன்றைய முதலமைச்சர் சித்தராமையாவுக்கும்! குடிநீருக்காக அணையே கட்டுகிறார்! இங்கே உள்ள ஆட்சியாளர்களின் இலட்சணம் தெரிந்துதான், "கேப்பையிலே நெய் வடிகிறது' என்கிறார்!

பழைய நாயக்க மன்னர்களைப்போல் படையெடுத்துச் செல்ல முடியாது!

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் பரோபகாரி காங்கிரசுக்காரனையோ, முல்லைப் பெரியாறு அணை உடையட்டும் என்று நினைக்கின்ற பெருந்தன்மையான பொதுவுடைமைக்காரனையோ பார்த்து, உங்களோடு எங்களுக்கென்ன உறவு என்று கேட்க திராவிட மாடல் அரசுக்குத் திராணி இருக்கிறதா?

இங்கே உள்ள காங்கிரசுக்காரனும், பொதுவுடைமைக்காரனும் நம்மோடு சேர்ந்துதான் கூச்சல் போடுகிறார்கள் என்பது போதுமானதா?

இவர்களென்ன மாநிலக் கட்சியா வைத்திருக்கிறார்கள்? கூச்சல்தான் போட முடியும் என்பதற்கு!

மாநிலக் கட்சிகளோடு சேர்ந்து கூச்சல் போடுவதற்குத் தேசியக் கட்சிகள் எதற்கு?

தேசம் சார்ந்த அனைத்திலும் ஒரு தீர்மானமான போக்கு தேசியக் கட்சிகளுக்கு இருக்க வேண்டாமா?

"தேசிய ஒருமைப்பாட்டுக்கான முதற் பெருந்தேவையை' அத்தனை தேசியக் கட்சிகளும் வலியுறுத்துகின்றன!

நதிநீர்ப் பகிர்வும், மாணப் பெரிய சந்தையும், பெரிய நாடாக இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பும்தானே நம்மை இந்திய தேசியத்தை ஏற்கும்படி செய்தன!

ஒரு கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் வற்றிக் குறைவாக இருந்தால், அந்தக் கண்மாயைச் சார்ந்த விவசாயிகள், பத்து ஏக்கரில் இருந்து ஒரு ஏக்கர் வரை வைத்திருப்பவர்கள், கண்மாயின் தலை மடையிலும், கடை மடையிலும் இருப்பவர்கள், எந்தச் சச்சரவும் இல்லாமல் நீர் போதாமையின் அடிப்படையில் தீர்த்துக் கொள்ள முடியும்போது, அரசுகளால் முடியாததால், அவர்கள் போய் விவசாயிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டியதுதானே!

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க மேக்கேதாட்டுவைக் கட்ட நினைக்கிற காங்கிரசு தேசியத்தோடும், முல்லைப் பெரியாறு உடையாதா எனத் தவிக்கும் பொதுமைத் தேசியத்தோடும், தமிழர் நலனைக் குறிக்கோளாகக் கொண்டதாகச் சொல்லும் திராவிட மாடல் ஆட்சி ஏன் தேர்தலில் கைகோக்க வேண்டும்!

மேக்கேதாட்டுவைக் கட்ட வலியுறுத்தும் கருநாடகக் காங்கிரசைக் கட்டுப்படுத்தாத காங்கிரசின் தேசியமும், முல்லைப் பெரியாறு அணையை நாம் பழுது பார்க்கப் பதினைந்து ஆண்டுகளாக தடைபோட்டு, அது உடைய நினைக்கும் பொதுவுடைமைப், பன்னாட்டுத் தேசியமும், தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் தேசியங்கள்தானே! இவற்றோடு என்ன உறவு?

இவை வயிற்றில் அடிக்கும் பகைகள் அல்லவா?

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.