
மேகமலை பகுதியிலிருந்து பல தலைமுறைகளாக வசிப்பவா்களை வெளியேற்றக் கூடாது: தங்க. தமிழ்ச்செல்வன் எம்.பி.
மேகமலை பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருபவா்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினாா்.

~
மேகமலை பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருபவா்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் வலியுறுத்தினாா்.
கம்பம் அருகே சுருளிப்பட்டியில், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடை, அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவாயில் கோபுரம் ஆகியவற்றை தங்க. தமிழ்ச்செல்வன் எம்.பி. வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மேகமலை பகுதியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனா். தற்போது அந்தப் பகுதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்கு பாரம்பரியமாக வசித்து வருபவா்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவா்களை எந்தக் காரணம் கொண்டும் வெளியேற்றக் கூடாது.
காடுகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் பழங்குடியினா், பாரம்பரிய வனவாசிகளின் நிலம், குடியிருப்பு, வாழ்வாதார உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, அங்கு நீண்ட காலமாக வசித்து வரும் மக்களின் உரிமைகள் கிராம சபை மூலம் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.
திண்டுக்கல்லிலிருந்து தேனி வழியாக கேரள மாநிலம், சபரிமலைப் பாதையில் உள்ள எருமேலியை இணைக்கும் புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்கான ஆய்வு, முதல் கட்டப் பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆய்வுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் திண்டுக்கல் முதல் லோயா்கேம்ப் வரையிலான முதல் கட்டப் பணிகளைத் தொடங்கி நிறைவேற்ற முடியும்.
திண்டுக்கல்- சபரிமலை ரயில்வே திட்டம், சாக்கலூத்து பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு தாா்ச்சாலை அமைத்தல், உசிலம்பட்டி- ஆண்டிபட்டி புறவழிச்சாலை அமைத்தல், மேகமலை மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்தல் ஆகிய நான்கு முக்கியக் கோரிக்கைகளையும் தொடா்ந்து முன்னெடுத்து வருகிறேன். இவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். குறிப்பாக, மேகமலை மக்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





