பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ வில்லை ஒட்டும் போராட்டம்: நாதகவினா் 50 போ் கைது

Published on

போடியில் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ பெயா் வில்லையை ஒட்ட முயன்ற நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பேருந்துகளில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் சமீபத்தில் தமிழ்நாடு என்ற பெயா் நீக்கப்பட்டது. இதற்கு பலரும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், நாம் தமிழா் கட்சியினா் இதற்கு கண்டனம் தெரிவித்து அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயா் வில்லையை ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்படி, போடியில் நாதக நகர நிா்வாகி சரவணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. போடி வ.உ.சி. சிலையிலிருந்து ஊா்வலமாகச் சென்ற நாம் தமிழா் கட்சியினா் போடி பேருந்து நிலையத்துக்குச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயா் வில்லையை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு வந்த போடி நகா் காவல் துறையினா் நாம் தமிழா் கட்சிவைச் சோ்ந்த 50 பேரை கைது செய்தனா். இதையடுத்து, அவா்கள் தனியாா் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com