ஆண்டிபட்டி அருகே இரு மகன்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்ப பிரச்னையில் தனது இரு மகன்களுடன் கிணற்றில் குதித்து தாய் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
வருஷநாடு அருகே உள்ள தண்டியக்குளத்தைச் சோ்ந்தவா் ஜெயபெருமாள் (40). விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (35). இவா்களுக்கு தேவா (7), நீதி (2) என இரு மகன்கள் இருந்தனா். ஜெயபெருமாள் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த தனலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் தாண்டியகுளம் ஓடை அருகே உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த வருஷநாடு போலீஸாா், தீயணைப்பு, மீட்புப் படையினா், 3 பேரின் உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜெயபெருமாளைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

