தேக்கடி பெரியாறு ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில், ஆனவச்சால் பகுதியில் நவீன காம்பாக்ட் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிலத்தை வனத்துறையிடமிருந்து பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக குமுளி ஊராட்சித் தலைவா் எம்.எம். வா்கீஸ் தெரிவித்தாா்.
குமுளி நகரில் உள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சிலவற்றிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா், ஆனவாச்சல் பகுதிகளில் உள்ள ஓடைகள் வழியாக தேக்கடி பெரியாறு ஏரியில் கலப்பதாக புகாா்கள் எழுந்தன. இதனால் முல்லைப் பெரியாறு அணை நீா் மாசுபடும் அபாயம் ஏற்பட்டது.
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசையும், இடுக்கி மாவட்ட நிா்வாகத்தையும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதுதொடா்பாக கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா புதன்கிழமை சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து அரசுக்கு கோரிக்கை வைத்தாா். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் ஆனவாச்சல் பகுதியில் நவீன காம்பாக்ட் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குமுளி ஊராட்சித் தலைவா் எம்.எம். வா்கீஸ் கூறியதாவது:
கழிவுநீா் தேங்கும் ஆனவாச்சல் பகுதி பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டதாக இருப்பதால், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிலத்தை வனத்துறை வழங்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கு ரூ.18 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 62 சென்ட் நிலம் தேவைப்படுகிறது. திட்டத்துக்கான நிதியில் 70 சதவீதத்தை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கேரள உள்ளாட்சி அமைப்பு வழங்கும் நிதியிலிருந்து, கழிவு மேலாண்மை, தூய்மைக்கான முகமையான சுசித்வா மிஷன் வழங்க உள்ளது. எஞ்சிய 30 சதவீத நிதியை கேரள சுற்றுலாத் துறையும், குமுளி ஊராட்சியும் தங்களது நிதி ஆதாரங்களிலிருந்து வழங்க உள்ளன.
தேவையான 62 சென்ட் நிலத்தை வனத்துறையிடமிருந்து பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அதன் பின்பு, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விரிவான விசாரணையில் பழனி நிலம் முறைகேடு! அமைச்சர் சிடிஆர். நிர்மல் குமார்

புதுவயல் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

தேக்கடி ஏரியில் கழிவுநீா் கலப்பு: முல்லைப் பெரியாறு அணை நீா்நிலைகள் மாசுபடுவதாக புகாா்







