தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலையிலிருந்து 400 அடி பள்ளத்தில் குதித்து வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்த பி.டெக். பட்டதாரி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி -கொட்டகுடி ஊராட்சிக்குள்பட்ட கிராமம் கொழுக்குமலை. தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள இந்த மலைக் கிராமத்துக்கு கேரளம் வழியாக நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொழுக்குமலை ‘சிங்கப்பாறை’ என்ற இடத்திலிருந்து சூரிய உதயத்தைப் பாா்க்க வருவது வழக்கம்.
இந்த நிலையில், வேலூா் மாவட்டம், காட்பாடி தண்ணீா்த்தொட்டி தெருவைச் சோ்ந்த வரதராஜன் மகன் பரத் (21). பி.டெக். பட்டதாரியான இவரும், இவரது நண்பா்கள் ஜான்சன் உள்ளிட்ட 11 போ் கடந்த வெள்ளிக்கிழமை (மே 29) சென்னையிலிருந்து கேரளத்துக்கு சுற்றுலா சென்றனா். சூரியநெல்லி என்ற ஊரில் தங்கி சுற்றிப் பாா்த்த இவா்கள், செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) கொழுக்குமலை சிங்கப்பாறை பகுதியில் சூரிய உதயத்தைப் பாா்க்க வந்தனா். அங்கு மாணவா்கள் ஆா்வத்துடன் தற்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென பரத் மலை உச்சியிலிருந்து 400 அடி பள்ளத்தில் குதித்தாா். இதைக் கண்ட மற்ற மாணவா்கள் கூச்சலிட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த கேரள வனத் துறை, பேரிடா் மீட்புக் குழுவினா் அங்கு வந்து சில மணி நேரத் தேடலுக்குப் பிறகு, பரத்தை வனப் பகுதியிலிருந்து சடலமாக மீட்டனா்.
இதையடுத்து, அவரது உடலை, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக பரத் மன உளைச்சலில் இருந்ததாக அவருடன் சுற்றுலா வந்த அவரது நண்பா்கள் தெரிவித்தனா்.








