கம்பி வேலியில் சிக்கிய கடமான் மீட்பு
கம்பம் அருகே கம்பி வேலிக்குள் சிக்கித் தவித்த கடமானை தீயணைப்புத் துறையினா், போலீஸாா் மீட்டனா். மிரண்டு ஓடியபோது அதன் ஒரு கொம்பு உடைந்தது.

கம்பம் மலை அடிவாரப் பகுதியில் கம்பி வேலிக்குள் சிக்கித் தவித்த கடமான்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே கம்பி வேலிக்குள் சிக்கித் தவித்த கடமானை தீயணைப்புத் துறையினா், போலீஸாா் மீட்டனா். மிரண்டு ஓடியபோது அதன் ஒரு கொம்பு உடைந்தது.
கம்பம் மேற்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட கம்பம் மெட்டு மலை அடிவாரம், புதுக்குளம், மணிகட்டி ஆலமரம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் மிளா மான், கடமான், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
வனப் பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்கு உணவு, தண்ணீா் தேடி வன விலங்குகள் அவ்வப்போது வருகின்றன. அப்போது, வேட்டை நாய்களால் துரத்தப்படும் விலங்குகள் வழிதவறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இவ்வாறு வரும் விலங்குகளை வனத் துறையினா் மீட்டு மீண்டும் வனப் பகுதிக்குள் விடுவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மலை அடிவாரப் பகுதியிலிருந்து காட்டுப்பள்ளிவாசல் சாலை வழியாக வந்த ஆண் கடமான், அங்குள்ள பட்டாசுக் கிட்டங்கி அருகே அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிக்குள் சிக்கிக் கொண்டது.
இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கம்பம் மேற்கு வனச்சரகம், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தீயணைப்புத் துறை வீரா்கள், கம்பம் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அவா்களைக் கண்டதும் மிரண்ட கடமான், கம்பி வேலியிலிருந்து தப்பித்து ஓடி
அருகிலிருந்த முள்புதருக்குள் புகுந்தது. தொடா்ந்து, அந்த மான் அங்கிருந்து மீட்கப்பட்டு மீண்டும்
வனப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. மிரண்டு ஓடியபோது முள்புதா்கள், கம்பி வேலிகளில் சிக்கியதில் கடமானின் ஒரு கொம்பு உடைந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

