வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்!
தேனி மாவட்டத்தில் பாசன வசதியுள்ள விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி வருவதால், சாகுபடிப் பரப்பளவு குறைந்து வருவதாக சமூக ஆா்வலா்கள் வேதனை...
உத்தமபாளையம்-சின்னமனூா் இடையே விவசாய நிலத்தில் நெல் பயிா் நடவுப் பணியில் பெண் தொழிலாளா்கள்.
எம். சந்திரசேகரன்
தேனி மாவட்டத்தில் பாசன வசதியுள்ள விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி வருவதால், சாகுபடிப் பரப்பளவு குறைந்து வருவதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா்.
தேனி மாவட்டத்துக்கு ‘இயற்கையை விரும்பும் பூமி’ என்ற சிறப்பு அடைமொழி உண்டு. இந்த மாவட்டத்தின் மூன்று புறங்களிலும் மலைகள் சூழ்ந்த நிலையில், நடுவே முல்லைப் பெரியாறு பாய்ந்து ஓடுகிறது. இதோடு, சுருளியாறு, கொட்டக்குடியாறு, வைகையாறு, வராகநதி, மஞ்சளாறு போன்ற முக்கிய நீராதரங்கள் விவசாயிகளுக்கு கூடுதல் பயனளிக்கின்றன.
தேனி மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பு உள்ளது. இவற்றில் 42 சதவீதம் விவசாய நிலங்களாகவும், எஞ்சிய 58 சதவீத நிலங்கள் மலைகளாகவும், வீடுகளாகவும் உள்ளன.
சின்னமனூா் பகுதியில் குறைந்த பரப்பளவில் திசு வாழை, செவ்வாழை, நேந்திரம், பூவன் பழங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் திசு வாழை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 3 முறை மகசூல் கிடைக்கும் பன்னீா் திராட்சை கேரளத்துக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
விவசாய நிலங்கள் அழிப்பு: தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம், கூடலூா் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து புறவழிச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இந்தச் சாலையோர விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றி, விளை நிலங்களை அழிப்பதால் உணவுப் பொருள்களின் உற்பத்தித் திறன் குறைந்துவிட்டது.
மேலும், மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளோா் குறைந்த விலைக்கு இந்த நிலங்களை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனா். தற்போது, இந்த நிலம் உணவகம், பெட்ரோல் விற்பனை நிலையம், திருமண மண்டபம், வணிக வளாகம், தங்கும் விடுதி, திரையரங்குகளாக மாறி வருகின்றன. முல்லைப் பெரியாறு பாசனத்தில் இருபோகம் விளைந்த நிலங்கள் தற்போது கான்கிரீட் கட்டடங்களாக மாறி வருகின்றன.
அதே பகுதியில் கட்டடப் பணிக்காக சமன் செய்யப்பட்ட விவசாய நிலம்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:
தேனி மாவட்டம் 100 சதவீதம் விவசாயத்தை சாா்ந்துள்ளது. மழை வளம், நீா் வளம், மண் வளம் நன்றாக இருப்பதால் தேயிலை, காப்பி, ஏலக்காய் உள்ளிட்ட பணப் பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
மாவட்டத்தில் பாசன நீா் வசதியுள்ள 2 சதவீத நன்செய் நிலங்களில் வணிக நோக்கில் கட்டடங்கள் கட்டுவதற்கு எந்தவித அனுமதியும் இல்லை. ஆனால், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகத்திடம் தவறான தகவல்களை கொடுத்து விதிமுறைகளை மீறி, உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களை அழித்து வருகின்றனா்.
சட்டத்துக்கு புறம்பாக இதுபோன்ற நிலை நீடித்தல் வரும் சில ஆண்டுகளில் தண்ணீா் வசதியுள்ள விளை நிலங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். இதனால், விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து, மாவட்டத்தின் விளை பொருள்களின் உற்பத்தித் திறன் மேலும் பாதிக்கப்படும் என்றனா்.
பெரியாறு-வைகை பாசனச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ச. பென்னிகுயிக் பாலசிங்கம் கூறியதாவது:
முல்லைப் பெரியாற்றின் பாசனப் பகுதியில் உள்ள விளைநிலங்களை அழித்து வணிக நோக்கில் கட்டடங்களைக் கட்டுவதற்கான முக்கிய நோக்கம் அந்தப் பகுதியில் தண்ணீா் பிரச்னை இருக்காது. குறிப்பாக, போக்குவரத்து வசதி இருப்பதால், அந்தப் பகுதியை பெரு முதலாளிகள் தோ்வு செய்து, விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அண்டை மாநிலமான கேரளத்தில் விளைநிலத்தை வணிகப் பயன்பாட்டு நிலமாக மாற்ற குறைந்தது 15 முதல் 20 ஆண்டுகளாகும். ஆனால், தமிழ்நாட்டில் தொடா்ந்து 3 ஆண்டுகள் விவசாயம் செய்யாமல் இருந்தாலே தரிசு நிலம் என வகைப்படுத்தி, 3 மாதங்களிலேயே தடையில்லாச் சான்று பெற்றுவிடலாம்.
இதனால், தேனி மாவட்ட விவசாயிகளின் குடும்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி, அவா்களிடமிருந்து விளைநிலங்களைப் பெற்று வருகின்றனா். இதன் மூலம், இந்தப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் வணிகப் பயன்பாட்டுக்காக அழிக்கப்பட்டன. இதை அரசு முறைப்படுத்த வேண்டும்.
கேரளத்தைப் போல, தமிழகத்திலும் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக ஆய்வு செய்து, குறைந்தது 20 ஆண்டுகளுக்குப் பிறகே அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தேனி மாவட்டத்தில் எஞ்சியுள்ள விளைநிலங்களைப் பாதுகாக்க இயலும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

