பட்டாசுக் கடைகளில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
கம்பம் நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்ட பட்டாசுக் கடைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

பட்டாசுக் கடை - கோப்புப்படம்
கம்பம் நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்ட பட்டாசுக் கடைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை ஆய்வு செய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
கம்பம் நகரின் முக்கியப் பகுதிகளான அரசமரம், வேலப்பா் கோயில் சுற்றுப்புறம், முக்கிய சாலை உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி தற்காலிக, நிரந்தர பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் அதிகமாகக் காணப்படும் இந்தப் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிா்க்க உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
பட்டாகக் கடைகளின் அருகே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இருக்கக் கூடாது. கடைகளுக்கிடையே குறைந்தபட்சம் 10 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும். தீயணைப்பு உபகரணங்கள், அவசர கால வழிகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். கோயில், முக்கிய சாலைப் பகுதிகளில் அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் பாதைகள் இருக்க வேண்டும்.
இதுமட்டுமன்றி, அனுமதி பெறப்பட்ட இடங்களில் மட்டுமே கடைகள் அமைக்கப்பட்டுள்ளனவா, நிா்ணயிக்கப்பட்ட அளவுக்குள் மட்டுமே பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா, மின் இணைப்புகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். எனவே, வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும், பாதுகாப்பு விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்ட கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

