தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

சாத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: ஒரு குடம் தண்ணீர் ரூ.12-க்கு விற்பனை

சாத்தூர் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால்,  ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:35 am IST

சாத்தூர் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால்,  ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் முறையான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகராட்சியில் நாள்தோறும் குடிநீர் விநியோகத்திற்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 
ஆனால் தாமிரபரணி  கூட்டுக் குடிநீர் திட்டம், மானூர்  திட்டங்கள் மூலம் நாள்தோறும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. 
இதனால் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நான்கு நாளுக்கு ஒரு முறை வழங்கபட்ட குடிநீர், தற்போது 7 நாளுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. இதில் மேடான பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
வசதி படைத்தவர்கள் மின் மோட்டார்கள் மூலம் நகராட்சி குடிநீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர். இதனால் சாத்தூரில் சாமானிய மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. 
இதனை பயன்படுத்தி தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள்  ஒரு  குடம் தண்ணீரை  12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன. அதனால் ஒரு வீட்டிற்கு நாளொன்றுக்கு குடிநீருக்காக 60  ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
குடிநீருக்காக மாதம் தோறும் பெரும் தொகை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 
எனவே சாத்தூர் வைப்பாற்றிலிருந்து உறை கிணறுகள் மூலம் குடிநீர் எடுத்து, விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: தாமிரபரணி, மானூர், சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மோட்டார்பழுது, மின்சார நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதுகுறித்து நகராட்சி மண்டல நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.