சாத்தூரில் சிகிச்சைக்காக 2 கி.மீ. அலையும் நோயாளிகள்!

சாத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் இருந்த உள்நோயாளிகள் பழைய மருத்துவமனை கட்டடத்துக்கு மாற்றப்பட்டதால்,  சிகிச்சைக்காக தினமும் 2 கி.மீ. தூரம் அலைகின்றனர்.

சாத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் இருந்த உள்நோயாளிகள் பழைய மருத்துவமனை கட்டடத்துக்கு மாற்றப்பட்டதால்,  சிகிச்சைக்காக தினமும் 2 கி.மீ. தூரம் அலைகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரதான சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக இட வசதியுடன் புதிய அரசு மருத்துவமனை கட்டபட்டது.இந்த மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி, வெளி நோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பிரேதப்பரிசோனை அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை அரசு மருத்துவமனையில் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகள் பிரிவு, பிரசவ வார்டு ஆகியவை புதிய மருத்துவமனைக்கு மாற்றபட்டடன. அதே சமயம் புதிய மருத்துவமனையில் இருந்த உள்நோயாளிகள் பிரிவை பழைய மருத்துவமனைக்கு மாற்றிவிட்டனர். இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் தவிர மற்ற நோயாளிகள் பழைய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி  36 பேர் பழைய மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் மருத்துவர்கள் பழைய மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கச் செல்வதில்லை. மாறாக பழைய கட்டடத்தில் உள்ள  உள்நோயாளிகள்  அனைவரும் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிய மருத்துவமனைக்கு பேருந்து மற்றும் ஆட்டோக்களில் தினமும் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதனால் பாதிக்கப்பட்ட  நோயாளிகள் பலரும் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றுவிடுகின்றனராம்.
மேலும் பழைய மருத்துவமனையில் சேதமடைந்த  அறுவைச் சிகிச்சை பகுதி அருகே உள்நோயாளிகள் பிரிவு இருப்பதாலும் அங்கு உள்நோயாளிகளாக தங்குவதற்கு நோயாளிகள் அஞ்சுகின்றனர்.
மருத்துவர்கள் பற்றாக்குறை: மருத்துவமனைக்கு 19 மருத்துவர்கள் தேவை. ஆனால் தற்போது 5 மருத்துவர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர்.  சாத்தூர் பகுதியில் நேரிடும் சாலை விபத்துகள்,  பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் வெடி விபத்துகளில் பாதிக்கப்பட்ட பலரும் சாத்தூரில் போதிய மருத்துவர் வசதியின்றி சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றனர். இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக்கழிவுகள் அபாயம்: அரசு மருத்துவமனையில் பயன்படுத்தபடும் மருத்துவக்கழிவுகளும், மருத்துவமனை வளாகத்தில்சேரும் குப்பைகளும் மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகிலேயே கொட்டப்படுகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் மூச்சு திணறல் உள்ளிட்ட 
நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
மேலும் மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால், சுகாதாரசீர் கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தலைமை மருத்துவர் அய்யனார்(பொறுப்பு) கூறியது: 
சாத்தூர் அரசு புதிய மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால்  கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய  கட்டடம் கட்ட உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. மருத்துவர்கள் 
பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவக் கழிவுகள் உடனே அகற்றப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com