சாத்தூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் முழுமை பெறுமா?

விருதுநகர் மாவட்டம் , சாத்தூரில்  பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து

விருதுநகர் மாவட்டம் , சாத்தூரில்  பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்  நகராட்சியின் 24 வார்டுகளில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை  அமைக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட  காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, இப்பணிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இதில், கழிவுநீரை பாதாள சாக்கடை மூலம் சேகரித்து, வெள்ளைக் கரை சாலை, நென்மேனி சாலை, நகாரட்சி காலனி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும்  கழிவுநீர் உந்து நிலையம் மூலம், இருக்கன்குடி சாலையில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு சென்று, சுத்திகரிப்பு செய்து, அந்த நீரை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது.
இதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஏலம் விடப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தெருக்களில் குழாய் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றன. 
இதில் மேலகாந்திநகர், தேரடிதெரு, இருக்கன்குடி செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம், சுத்திகரிப்பு நிலைய சுற்றுச்சுவர் அமைப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளாக பிரித்து பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக இப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால், இவற்றிற்குத் தேவையான ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மூலப்பொருள்கள் அனைத்தும் வாங்கப்பட்டு, பணிகள் நடைபெறும் இடத்தில் காட்சிப் பொருளாக உள்ளன. இதற்கான அலுவலகம் கட்டும் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பணிகள் நிறுத்தம்: இதில், 24 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில், மேலும் பணிகளைத் தொடர பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே முடித்த பணிகளுக்கும் பணம் விடுவிக்கப்படவில்லை என ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இதனால் பணிகளைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதிலை அளிக்க மறுப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் சிலர் சென்னை தனியார் நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே,  ஒப்பந்ததாரர்களுக்கு உரிய பணத்தை செலுத்திப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்: சாத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரரை மாற்றுவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வேறு ஒரு ஒப்பந்ததாரர் ஏலம் எடுத்த பின்னர், பணிகள் தொடரும் என்றனர். சாத்தூரின் நீராதாரமான வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கத் தான்  பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டதால் வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பதுடன், நிலத்தடி நீரும்  மாசுபடும் நிலை உள்ளது.
 எனவே, இத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com