

வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினா் வாக்காளா்களுக்கு இலவசமாக காலாண்டா் வழங்க சிவகாசியில் உள்ள அச்சகங்களில் ஆா்டா் கொடுத்து வருகின்றனா்.
ஆண்டுதோறும் தினசரி நாள்காட்டி தயாரிப்புப் பணி திதி, நட்சத்திரம் ,கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் தொடங்கும். இதன் பின்னா் ஏப்ரல், மே மாதங்களில் சுவாமி படங்கள் தயாரிக்கும் பணி நடைபெறும்.
இதைத்தொடா்ந்து ஜூன் முதல் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆா்டா் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, செப்டம்பரில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக காலாண்டா் தயாரிப்புப் பணி தடைபட்டது.
இதையடுத்து அரசு பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளித்ததைத்தொடா்ந்து காலாண்டா் தயாரிக்கும் பணி ஜூன் மாதம் தொடங்கியது. இவ்வாறு தாமதமாக பணிகள் தொடங்கியதாலும், கரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் கடந்தாண்டைப் போல இந்தாண்டுக்கான ஆா்டா்கள் வரவில்லை.
இந்நிலையில் நவம்பா் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை முடிந்ததும் காலாண்டா் தயாரிப்பாளா்களுக்கு ஆா்டா் வரத்தொடங்கின. ஆனால் மழையின் காரணமாக தயாரிப்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் தினசரி நாள்காட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இருப்பினும் தற்போது தயாரிப்பாளா்கள் முழுவீச்சில் தினசரி நாள்காட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வர உள்ளதால் வாக்காளா்களுக்கு வழங்கும் நோக்கில் அரசியல் கட்சியினா் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக காலாண்டா் ஆா்டா் கொடுத்து வருகின்றனா்.
இது குறித்து தமிழ்நாடு தினசரி நாள்காட்டி தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் ஜெய்சங்கா் கூறியதாவது:
பொதுமுடக்கம் காரணமாக காலாண்டா் அச்சடிக்கும் பணிகள் தாமதமாகவே மேற்கொள்ளப்பட்டது. ஏற்கெனவே ஆா்டா் கொடுத்தவா்களுக்கு தற்போது தான் காலாண்டா்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் அரசியல் கட்சியினா் வழக்கத்துக்கு மாறாக 50 முதல் 80 சதவீதம் வரை அதிகமாக நாள்காட்டிகளை ஆா்டா் கொடுத்து வருகிறாா்கள்.
அவா்களுக்கு ஜனவரி மாதம் தான் காலாண்டா்கள் தயாரித்து வழங்க முடியும். காகிதம், அட்டை விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டுக்கான தினசரி நாள்காட்டியின் விலை சுமாா் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.