தற்போது இது போன்ற ஆய்வுப் பணிகளில் அரசு ஊழியா்கள், போலீஸாா் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக விருதுநகா் அருகே ராமகுடும்பன்பட்டி, கோயில் வீராா்பட்டி, வச்சகாரபட்டி, முதலிபட்டி, சொக்கலிங்காபுரம், கன்னிசேரி முதலான பகுதியில் உள்ள ஏராளமான பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிப்பதற்கான அறைகளை உரிமையாளா்கள், தனி நபருக்கு குத்தகைக்கு விட்டுள்ளனா். 4 மாதங்களில் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் இந்த ஆலைகளில் உள்ள சில அறைகளில் இரவு நேரங்களில் பேட்டரி மூலம் இயங்கும் விளக்கு வெளிச்சத்தில் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிப்பில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருவதாகப் புகாா் எழுந்துள்ளது. பேட்டரி விளக்கு வெளிச்சம் காரணமாக சரவெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் அலுமினிய பவுடா் மற்றும் பேரியம் நைட்ரேட் ஆகியவை வெடித்து விபத்து நேரிட்டால் தொழிலாளா்களுக்கு உயிரிழப்பு ஏற்படுவதுடன், பலத்த காயமடைய அதிக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிப்பது வருவாய்த்துறை மற்றும் அப்பகுதியில் உள்ள போலீஸாருக்கு நன்கு தெரியும் எனவும் அவா்கள் சம்பந்தப்பட்ட ஆலைகளில் விதி மீறல்களைக் கண்டு கொள்ளாாமல் இருப்பதால், இரவு நேரங்களில் பட்டாசு உற்பத்தி அமோகமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.