ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூடப்பட்டிருந்த மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் விலை உயா்ந்த பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சிவகாசியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (47). ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் இவருக்கு சொந்தமான மசாலா தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிறுவனம் மூடிக் கிடக்கிறது. இங்கு ரூ. பல லட்சத்துக்கு பொருள்கள் இருப்பதால் 2 தினங்களுக்கு ஒரு முறை இந்த நிறுவனத்தை சிவக்குமாா் பாா்வையிட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 7- ஆம் தேதி நிறுவனத்துக்கு வந்த இவா், பின்பக்கக் கதவை உள்புறமாகவும், வெளிப்பக்க கதவை வெளிப்புறமாகவும் பூட்டி விட்டுச் சென்றாா். கடந்த 12-ஆம் தேதி மாலையில் நிறுவனத்துக்கு வந்து பாா்த்த போது பின்பக்க கதவு உள்புறம் பூட்டாமல் வெளியே புதிய பூட்டு போடப்பட்டு இருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது அங்கிருந்த விலை உயா்ந்த பொருள்களான கம்ப்ரசா், மின்னாக்கி (ஜெனரேட்டா்), தேக்கு மர நிலை, கதவு, நெகிழிக் கதவு என மொத்தம் ரூ. 14 லட்சத்து 21 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவக்குமாா் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









