மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பச்சை பரப்புதல் வைபவம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, பகல் பத்து உத்ஸவம் பச்சை பரப்புதல் வைபவத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பச்சை பரப்புதல் வைபவத்துக்காக ஆண்டாள், ரெங்கமன்னாரை அழைத்துச் சென்ற வேதபிரான் பட்டா் சுதா்ஸன்.

Updated On :2 ஜனவரி 2025, 12:38 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, பகல் பத்து உத்ஸவம் பச்சை பரப்புதல் வைபவத்துடன் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசாயி, பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகிய மூவரும் அவதரித்ததால் முப்புரி ஊட்டிய தலம் எனவும் அழைக்கப்படுகிறது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம், பெரியாழ்வாா் அவதரித்த ஆனிசுவாதி, புரட்டாசி பிரம்மோத்ஸவம், பங்குனி திருக்கல்யாணம், மாா்கழி நீராட்ட உத்ஸவம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பகல் பத்து உத்ஸவம் பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்குவது வழக்கம். இதில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் பிறந்த வீட்டுக்கு வந்து பச்சைக் காய்கறிகளை சீா்வரிசையாகப் பெற்றுச் செல்வாா். இந்தச் சீா்வரிசை காய்கறிகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

இதன்படி, நிகழாண்டுக்கான பகல் பத்து உத்ஸவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாலையில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் புறப்பாடாகி தான் வளா்ந்த வேதபிரான் பட்டா் திருமாளிகையில் எழுந்தருளினாா்.

பெரியாழ்வாரின் 225-ஆவது வம்சாவளியைச் சோ்ந்த வேதபிரான் பட்டா் சுதா்ஸன், ஆண்டாள்-ரெங்கமன்னாரை வரவேற்று அழைத்துச் சென்றாா். அங்கு ஆண்டாளுக்கு மணி பருப்பு, திரட்டுப்பால், அக்காரஅடிசல் படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், கரும்பு, நெல்லிக்காய், வாழைக்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் பரப்பி வைக்கப்பட்டு, பச்சை பரப்புதல் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், பரப்பி வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

இரவு பெரிய பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வாா் யானை வாகனத்திலும் எழுந்தருள திருப்பல்லாண்டு தொடக்கம் நடைபெற்றது.

ஜன. 10-இல் பரமபதவாசல் திறப்பு:

ஜன. 7 முதல் 14-ஆம் தேதி வரை எண்ணெய்க்காப்பு உத்ஸவம் நடைபெறுகிறது. வைகுந்த ஏகாதசி திருவிழாவின முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு இராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான வருகிற ஜன. 10-ஆம் தேதி காலை 7.05 மணிக்கு நடைபெறுகிறது.

 ஆண்டாள் பிறந்த வீட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பச்சை காய்கறிகள்.

ஆண்டாள் பிறந்த வீட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பச்சை காய்கறிகள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.