சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு: 6 போ் கைது
வத்திராயிருப்பு அருகே அட்டை மில் கிட்டங்கியில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி மாவூத்து சாலையில் உள்ள தனியாா் அட்டை மில் கிட்டங்கியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய்த் துறையினா், போலீஸாா் இணைந்து சோதனை செய்தபோது, வடமாநிலத் தொழிலாளா்களை கொண்டு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள், வெடி பொருள்களை அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள், சரக்கு வாகனம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் சுந்தர்ராஜ் அளித்தப் புகாரின் பேரில், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட திருத்தங்கல் எம்.ஜி.ஆா். குடியிருப்பைச் சோ்ந்த மோகன் (50), பீகாா் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சோ்ந்த அஜய்குமாா் (25), ரோஹித் குமாா் (27), விஜய் மாஞ்சி (32), குண்டு மாஞ்சி (33), வினோ மாஞ்சி (32) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் கிட்டங்கி உரிமையாளரான ராஜபாளையத்தைச் சோ்ந்த ராஜகோபால், தாயில்பட்டியைச் சோ்ந்த மாரீஸ்வரன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

