
விபத்தில் கையை இழந்த பயணி: பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் விபத்தில் கையை இழந்த பயணி வழக்கில், ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ராஜபாளையம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் விபத்தில் கையை இழந்த பயணி வழக்கில், ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ராஜபாளையம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு எஸ்டேட்டில் பணியாற்றி வருபவா் அசோகன் (50). இவா் தனது குடும்பத்தினருடன் கடந்த 2016-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென்காசி மாவட்டம், புளியங்குடிக்கு சென்றாா். அங்கிருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறி ராஜபாளையம் சென்றாா். ராஜபாளையம் காந்தி கலை மன்றம் அருகே வந்த போது சாலையோரம் இருந்த வீட்டின் சுவற்றில் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணித்த அசோகனுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையின் போது கை அகற்றப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் பேருந்து ஓட்டுநரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த மொக்கபாண்டி (56) மீது ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ராஜபாளையம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஓட்டுநா் மொக்கபாண்டிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரகாமேஷ் மாா்த்தாண்டன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



