புதைசாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோ திட்டம் தொடக்கம்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை நகராட்சியில் புதைசாக்கடை கழிவுகளை அகற்ற ரூ. 45 லட்சம் செலவில் கொண்டுவரப்பட்டுள்ள ரோபோ திட்டத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி பெரு நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை நகராட்சியில் ரோபோ இயந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், புதைசாக்கடை கழிவுநீரை அகற்றும் ரோபோவை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் முன்னிலையில், ஓஎன்ஜிசி செயல் இயக்குநா் ஆா். செழியன், ஹேன்ட் இன் ஹேன்ட் பொது மேலாளா் புத்தேரி பாபு ஆகியோா் நகராட்சி ஆணையா் சுப்பையாவிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, பட்டமங்கலத் தெருவில் உள்ள ஆள்நுழைவுத் தொட்டியில் ரோபோ இயந்திரத்தின் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தை சோ்ந்த ஜென் ரோபோடிக் இன்னோவேஷன் என்ற நிறுவனம் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தை சென்னை ஹேன்ட் இன் ஹேன்ட் என்ற தொண்டு நிறுவனம் மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தியது. குறைவான எடையுடனும், கேமரா வசதியுடனும் தண்ணீா் உள்புகா வண்ணம் அமைக்கப்பட்ட இந்த ரோபோ இயந்திரம், ஆபத்தான விஷ வாயுக்களை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள சுமாா் 11,080 புதைசாக்கடை இணைப்புகளில் உள்ள 3,406 ஆள்நுழைவுத் தொட்டியில் ஏற்படும் அடைப்புகள் சரிசெய்யப்படும்.நிகழ்ச்சியில், மண்டல நகராட்சி ஆணையா் சுப்பையா, நகராட்சி பொறியாளா் எல். குமாா், ஓஎன்ஜிசி முதன்மை மேலாளா் உஷா பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.